ஜியா கானிடம் கடைசியாகப் பேசிய நடிகர் மகன்- போலீஸ் விசாரணை

|

Jiah Khan Suicide Case Police Question An Actors Son

சென்னை: நேற்று தற்கொலை செய்து கொண்ட நடிகை ஜியா கானுடன் கடைசியாகப் பேசியவர் ஒரு நடிகரின் மகன் என்று தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

25 வயது பிரபல நடிகை ஜியா கான் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு ஜியா கான் துப்பாட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது கழுத்தில் ஏற்பட்டுள்ள தழும்புகளை வைத்து, அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது உடல் ஜே.ஜே. மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்த தற்கொலை பாலிவுட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜியா கான் கடைசியாக நடிகர் ஆதித்யா பஞ்சோலியின் மகன் சுராஜ் பஞ்சோலியுடன் தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்துள்ளது.

எனவே, அவரிடம் கண்டிப்பாக விசாரணை நடத்துவோம் என்று துணை கமிஷனர் விஷ்வாஸ் நாக்ரே பாட்டீல் தெரிவித்தார். மேலும் ஜியா கானுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

ஜியா கான் சாவு பற்றி அவரது வீட்டின் பாதுகாவலர் கூறுகையில், ''என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. ஆனால், ஆம்புலன்ஸ் மற்றும் போலீசார் வந்தபோதுதான் அவர் இறந்தது தெரியவந்தது'' என்றார்.

ஜியா கான் மரணம் பற்றி கேள்விப்பட்ட நடிகர் அமிதாப் பச்சன் டுவிட்டர் தளத்தில் தனது துக்கத்தை பதிவு செய்திருந்தார். அதில், ''ஜியா கான் இறந்துவிட்டாரா? என்ன நடந்தது? இது சரியான தகவல்தானா? என்னால் நம்ப முடியவில்லை'' என்று குறிப்பிட்டிருந்ததார்.

 

Post a Comment