'ஹலோ பிரபு சாலமன் பேசறேன்... உறவினருக்கு உடம்பு சரியில்ல.. பணம் தந்து உதவுறீங்களா?'

|

Prabhu Solomon Lodges Complaint On Money Cheating

மேலே நீங்கள் படித்தது ஏதோ தலைப்பு சுவாரஸ்யத்துக்காக எழுதப்பட்டதல்ல. சமீப காலமாக பல பிரபலங்களுக்கு போன் செய்து, பிரபு சாலமன் குரலில் யாரோ சிலர் பேசுவது இப்படித்தானாம்.

இது பல நேரங்களில் ஒர்க் அவுட் ஆகி, லட்சக்கணக்கில் பணமும் கொடுத்துள்ளனர் பெயர் சொல்ல விரும்பாத சில பிரபலங்கள்.

இயக்குனர் பிரபு சாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குனர்களிடமும் நடிகர்கள், நடிகைகளிடமும் 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன் என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன். இப்போ எனக்கு கொஞ்சம் டைட். மீதி மருத்துவ செலவுக்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள்," என்பார்களாம்.

பிரபு சாலமன் இன்று முன்னணி இயக்குநர். அவருக்கு என்ன கஷ்டமோ.. கொடுத்து வைப்போம். பின்னால் உதவும் என்ற நினைப்பில் பலரும் லட்சக்கணக்கில் கொடுத்துள்ளனர். அதுவும் குறிப்பிட்ட வங்கிக் கணக்கைக் கொடுத்து அதில் போடுங்கள் என்று மோசடிப் பேர்வழி சொன்னதும், இன்னும் நம்பிக்கையுடன் கொடுத்துள்ளனர்.

விஷயம் பிரபு சாலமன் காதுக்கு வர, அவர் அலறியடித்துக் கொண்டு மறுப்பு வெளியிட்டுள்ளார்.

"என்பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்காமல், முதலில் என்னைத் தொடர்பு கொள்ளவும். அந்த மோசடிப் பேர்வழி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க உதவும்," என்று அறிக்கை விடுத்துள்ளார் பிரபு சாலமன்.

"இதேபோலத்தான் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி இதேபோல மோசடி செய்துள்ளனர் அதே நபர்தான் என் பெயரிலும் மோசடி செய்திருப்பாரோ என்ற சந்தேகம் உள்ளது. இதுகுறித்து மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளேன்," என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Post a Comment