வசந்த் அன் கோ உரிமையாளர் வசந்த குமாரின் முதல் மகன் வசந்த் விஜய் ஏற்கெனவே பிரபல நடிகராக உள்ளார். இப்போது வசந்த குமாரின் இன்னொரு மகன் வினோத் குமாரும் சினிமாவுக்கு வந்துள்ளார்... ஆனால் தயாரிப்பாளராக.
எடுத்த எடுப்பிலேயே இரு தமிழ்ப் படங்களையும், இரண்டு தமிழ் ஆல்பங்களையும் தயாரிக்கிறார் வினோத் குமார்.
இவற்றில் முதல் படத்துக்கு தெரியாம உன்னைக் காதலிச்சிட்டேன் என்று தலைப்பு வைத்துள்ளார். இந்தப் படத்தை கே ராமு இயக்குகிறார். வசந்த் விஜய் ஹீரோவாக நடிக்க, ரஸா நாயகியாக நடிக்கிறார். ஸ்ரீநாத் இசையமைக்கிறார்.
வினோத் குமார் தயாரிக்கும் மற்றொரு படம் என்னமோ நடக்குது. இதிலும் வசந்த் விஜய்தான் ஹீரோ. மஹிமா ஹீரோயின். பிரபு, ரகுமான், தம்பி ராமையா, சுகன்யா, சரண்யா என பெரிய நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறது. பிரேம்ஜி அமரன் இசையமைக்க, பி ராஜபாண்டி இயக்குகிறார்.
இசை ஆல்பங்கள்..
இந்த இரு படங்கள் தவிர, யூஸுப் - பிரேம்ஜி இசையில் விழியும் செவியும் என்ற தன் முதல் இசை ஆல்பத்தைத் தயாரித்து வருகிறார்.
இரண்டாவது ஆல்பத்துக்கு பிரேம்ஜி, யூஸுப் மற்றும் சத்யா இசையமைத்துள்ளனர்.
லயோலாவில் பிகாம் பட்டமும், லண்டன் சவுத் பேங்க் பல்கலைக் கழகத்தில் எம்எஸ்ஸி நிர்வாகவியல் பட்டமும் பெற்றுள்ள வினோத் குமார், தனது ட்ரிபிள் வி நிறுவனம் மூலம் தொடர்ந்து படங்கள் தயாரிக்கப் போகிறாராம்.
இதற்காகவே மலையாளத்தில் வெற்றி பெற்ற மேக்கப் மேன் மற்றும் மம்முட்டி நடித்த ப்ளாக் ஆகிய படங்களின் ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்.
Post a Comment