பாரதிராஜாவின் அன்னக்கொடி படம் இன்று தமிழகமெங்கும் வெளியாகிறது.
பொம்மலாட்டம் படத்துக்குப் பிறகு பாரதிராஜா இயக்கத்தில் வெளி வரும் படம் அன்னக்கொடி. ஆரம்பத்தில் அன்னக்கொடியும் கொடிவீரனும் என்று பெயரிடப்பட்ட இந்தப் படத்தில் அமீர், இனியா, புதுமுகம் லட்சுமணன் மற்றும் கார்த்திகா நடிக்கவிருந்தனர். இவர்களை வைத்து தேனி அல்லி நகரத்தில் பெரிய அளவில் பூஜையும் போடப்பட்டது.
ஆனால் பின்னர் அமீரும் இனியாவும் இப்படத்திலிருந்து விலக்கப்பட்டனர். லட்சுமணனும் கார்த்திகாவும் மட்டும் நடித்துள்ளனர். அமீர் நடிக்கவிருந்த பாத்திரத்தில் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்குப் பிறகு அன்னக்கொடி படத்தை வெளியிடுகிறார் பாரதிராஜா.
இந்தப் படம் கலப்புத் திருமணத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படுவதாக செய்திகள் கசிந்ததால், அதன் அடிப்படையில் படத்தை தடை செய்யக் கோரி மதுரை தேவர் பாசறையின் இயக்கத் தலைவர் ஏ.கே.ரகுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தடை எதையும் விதிக்காமல் வழக்கைத் தள்ளி வைத்தனர்.
எனவே திட்டமிட்டபடி இன்று அன்னக்கொடி படம் வெளியாகிறது. முழுக்க முழுக்க கிராமத்துப் படமாக வந்துள்ள அன்னக்கொடி, பாரதிராஜாவுக்கும் ரசிகர்களுக்கும் இன்னொரு மண்வாசனையாக அமையுமா... பார்க்கலாம்!
Post a Comment