சென்னை: படப்பிடிப்பில் நடந்த ஒரு சேஸிங் காட்சியின்போது ஏற்பட்ட விபத்தில் காயமடைந்தார் நடிகர் தருண் கோபி.
விஷால் நடித்த ‘திமிரு' படத்தை இயக்கியவர் தருண்கோபி. மாயாண்டி குடும்பத்தார், பேச்சியக்கா மருமகன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர்.
இவர் இப்போது, ‘கன்னியும் காளையும் செம காதல்' என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கரண் கதாநாயகனாக நடிக்கிறார். தம்பி வெட்டோத்தி சுந்தரம் படத்தை இயக்கிய விசி வடிவுடையான் தயாரித்து இயக்குகிறார்.
படத்தின் படப்பிடிப்பு பூந்தமல்லி அருகில் உள்ள படூர் கிராமத்தில் நேற்று நடந்தது. மோட்டார் சைக்கிளில் செல்லும் தருண்கோபியை ஒரு கார் துரத்தி மோதுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அப்போது கார் ‘பிரேக்' பிடிக்காமல், தருண்கோபி மீது நிஜமாகவே மோதி விட்டது.
தருண்கோபி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். அவருடைய கை-கால்களில் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தருண் கோபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது ஓய்வில் உள்ளார். இந்த விபத்து காரணமாக, படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.
Post a Comment