சென்னை: கோச்சடையான் படத்துக்கு முன்பாக ரஜினி புதிய படம் ஒன்றில் நடிக்க திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தை கேஎஸ் ரவிக்குமார் இயக்கப் போவதாகவும், இதுகுறித்த ஆலோசனை தீவிரமாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தியத் திரையுலகின் முதல் மோஷன் கேப்சரிங் படமாக தயாராகி வருகிறது ‘கோச்சடையான்'. இதில் ரஜினி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி தீபிகா படுகோனே நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
ஆனால் படத்தின் ட்ரைலரே இன்னும் வெளியாகவில்லை. காரணம், ரஜினி எதிர்ப்பார்த்த சர்வதேச தரத்துக்கு ஏற்ப படத்தை மெருகேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
எனவே கோச்சடையான் படத்தின் வெளியீட்டுக்கு முன்பாக ஒரு புதிய படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம் ரஜினி. கோச்சடையான படம் தொடர்ந்து தள்ளிப் போவதுதால் ரசிகர்கள் சோர்ந்து போகாமலிருக்கவே இந்த முடிவு என்கிறார்கள்.
இந்தப் படத்தை ரஜினியின் ஆஸ்தான இயக்குனரான கே.எஸ்.ரவிக்குமார்தான் இயக்குகிறார். அண்மையில் இது குறித்து கே.எஸ்.ரவிக்குமார் அழைத்து பேசிய ரஜினி, ‘முத்து', ‘படையப்பா' பாணியில் காமெடி, அதிரடி கலந்த கதையை தயார் செய்யச் சொல்லி இருக்கிறாராம். மேலும் படத்தை இரண்டு மாதத்தில் முடித்துவிட வேண்டும் என்றும் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகுதான் படம் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்றும் அப்போது கண்டிஷனும் போட்டிருக்கிறார்.
ஏற்கெனவே இருவரும் இணைந்த படங்களான ‘ஜக்குபாய்', ‘ராணா' ஆகிய இரண்டு படங்களும் பூஜையுடன் நின்றுவிட்டன. அதனால் இந்தமுறையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதற்காக படம் பற்றிய அனைத்து தகவல்களையும் மிக ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார்களாம்.
Post a Comment