சென்னை: 'ப்பா.. என்ன பொண்ணுடா இது.. பேய் மாதிரி' என்று விஜய் சேதுபதியால் வெறுப்பேற்றப்பட்ட காயத்ரி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தேம்பித் தேம்பி அழுதார்.
காரணம்... அவர் நடித்த பொன்மாலைப் பொழுது படக்குழுவைப் பிரிய முடியாததுதானாம்.
கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘பொன் மாலை பொழுது.'
இந்த படத்தில் ஆதவ் கண்ணதாசன் ஜோடியாக காயத்ரி நடிக்கிறார். இவர் ஏற்கனவே 18 வயசு, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். ‘பொன் மாலை பொழுது' படத்தின் பிரஸ் மீட் சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட காயத்ரியைப் பேச அழைத்தனர். பேசுவதற்கு மைக்கை எடுத்த காயத்ரி, பின்னர் பேச முடியாமல் தவித்தார்.
சில நொடிகளில் கண் கலங்கி அழ ஆரம்பித்துவிட்டார். தொடர்ந்து 2 நிமிடங்களாக அவர் பேச முயற்சி செய்து முடியாததால், சோகமாக இருக்கையில் வந்து அமர்ந்துவிட்டார்.
ஏன் இப்படி அழுதீர்கள் என்று பின்னர் கேட்டபோது, "நான் நிறைய படங்களில் நடிப்பதில்லை. நல்ல கதையை தேர்வு செய்து, சில படங்களில் மட்டுமே நடிக்கிறேன். ‘பொன் மாலை பொழுது' அப்படி ஒரு படம்தான்.
படத்தின் இயக்குநர் ஏ.சி.துரை, தயாரிப்பாளர்கள் அமிர்த கவுரி, சத்யலட்சுமி, கதாநாயகன் ஆதவ் மற்றும் படக்குழுவினர் அனைவரும் என்னிடம் பாசத்துடன் பழகினார்கள். அன்பாக நடந்துகொண்டார்கள்.
ஒவ்வொரு நாளும் படப்பிடிப்புக்கு போகும்போது உற்சாகமாக இருக்கும். ஒரு குடும்பம் போல் பழகினோம். படப்பிடிப்பு இப்போது முடிந்து விட்டது. இனிமேல் இவர்களைப் பார்க்க முடியாதே என்று நினைத்ததும் அழுகை அழுகையாக வருகிறது. உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் அழுது விட்டேன். அதான் பேச முடியவில்லை," என்றார்.
Post a Comment