லாஸ் ஏஞ்சல்ஸ்: புரூஸ்லீயின் என்டர் தி ட்ராகன் படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஜிம் கெல்லி புற்று நோயால் மரணமடைந்தார். அவருக்கு வயசு 67.
ஜிம்கெல்லி அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர். என்டர் தி ட்ராகன் அவரை முக்கிய நடிகராக அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஆசியர்களாக இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான முடியலங்காரத்துடன் கராத்தே சண்டை போட்டு அனைவரையும் கவர்ந்தார் கெல்லி.
‘என்டர் தி டிராகன்' படம் தவிர திரீ தி ஹார்ட் வே, பிளாக் பெல்ட் ஜோன்ஸ் மற்றும் பிளாக் சாமுராய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஜிம் கெல்லி மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது முன்னாள் மனைவி மரில்யன் டிஷ்மான் தெரிவித்துள்ளார். அவர் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறினார்.
கடந்த 2010-ம் ஆண்டில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியின்போது, "புரூஸ்லியுடன் ‘என்டர் தி டிராகனில்' நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது எனது வாழ்க்கையில் கிடைத்த இனிய அனுபவங்களில் ஒன்றாகும். அவருடன் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நடித்தேன்," என தெரிவித்துள்ளார்.
Post a Comment