'லுங்கி டான்ஸ் - தலைவருக்கு மரியாதை' ( Lungi Dance - Thalaivar Tribute) எனும் பெயரில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக ஒரு பாடலை உருவாக்கியுள்ளனர் பாலிவுட் கலைஞர்கள்.
ஷாரூக்கான், தீபிகா படுகோன் இந்தப் பாடலுக்கு நடனமாடியுள்ளனர். ஷாரூக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் பட வெளியீட்டை ஒட்டியே இந்தப் பாடல் உருவாக்கப்பட்டாலும், படத்துக்கும் பாட்டுக்கும் சம்பந்தமில்லை என அறிவித்துள்ளனர்.
ஹனி சிங் உருவாக்கியுள்ள இந்த லுங்கி டான்ஸ், டி சீரிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் டி சீரிஸ் நிறுவன தலைவர் பூஷன் குமார் இந்தப் பாடல் குறித்து ஷாரூக்கானிடம் கூறி, நடனமாடக் கேட்டபோது, "ரஜினியை யாருக்குத்தான் பிடிக்காது! அவரது தீவிர ரசிகர்களில் ஒருவன் என்ற முறையில் இந்தப் பாடலுக்கு நடனமாடுவது எனக்குப் பெருமை," என்றவர் தீபிகாவிடம் இதுகுறித்துப் பேசியபோது, மிக விருப்பத்துடன் ஒப்புக் கொண்டாராம் லுங்கி டான்ஸில் ஆட.
"ரஜினி சார் மிகப் பெரிய நடிகர், சாதனையாளர். அவரைக் கவுரவிக்க இந்தப் பாடல் மூலம் எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி," என்றார் ஷாரூக்கான். இந்தப் பாடலுக்கு சின்னி பிரகாஷ் நடனம் அமைத்துள்ளார்.
தலைவருக்கு மரியாதை என்ற தலைப்புடன் விரைவில் இந்தப் பாடல் வெளியாகிறது.
Post a Comment