ரஜினி- ஷங்கர் சந்திப்பு!

|

ரஜினி- ஷங்கர் சந்திப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்துப் பேசியுள்ளார் இயக்குநர் ஷங்கர். இது ஜஸ்ட் நட்பு ரீதியிலான சந்திப்பா அல்லது புதிய படத்துக்கான கதை விவாதமா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வந்த எந்திரன் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இந்தப் படத்தை ஷங்கர் இயக்கினார். வசூலில் இந்தியாவின் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்தப் படத்துக்கு இணையான வெற்றியை இதுவரை வேறு எந்தப் படமும் பெறவில்லை.

எந்திரனுக்குப் பின் ரஜினி நடிப்பதாக அறிவித்த இரு படங்கள் ராணா மற்றும் கோச்சடையான்.

இவற்றில் ராணா படம் தொடங்கிய அன்றே ரஜினி உடல் நிலை சரியில்லாமல் போனதும், அதன் பிறகு அப்படம் கைவிடப்பட்டதும் நினைவிருக்கலாம்.

அடுத்து ஆரம்பிக்கப்பட்ட படம் கோச்சடையான். இது மோஷன் கேப்சரிங் முறையில் 3 டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூன்று ஸ்டில்கள் மட்டும்தான் இதுவரை வெளியாகியுள்ளன.

வேறு ஒரு தகவலும் இல்லை. இதன் ட்ரைலர் வெளியீடு, பாடல் வெளியீடு போன்ற நிகழ்ச்டிகள் குறித்தும் உறுதியான எந்த அறிவிப்பும் இல்லை.

இந்த நிலையில், ரஜினியி்ன் அடுத்த படம் குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி கிளம்பிக்கொண்டே இருக்கிறது.

அவரை கேஎஸ் ரவிக்குமார் இயக்குவார் என்று கூறி வந்தனர். ஆனால் இப்போது வேறொரு செய்தி..

சமீபத்தில் ரஜினியைச் சந்தித்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், அநேகமாக ஐ முடிந்த பிறகு ரஜினியை வைத்து ஷங்கர் மிகப் பிரமாண்டமான படம் ஒன்றை உருவாக்குவார் என்றும் அந்த சந்திப்புக்கு கை கால் இறக்கை வைத்து செய்தி உருவாக்கியுள்ளனர்.

இது நட்பு ரீதியிலான சந்திப்பாகவும் இருக்கலாம்... கோச்சடையான் ட்ரைலரை ஷங்கருக்குக் காட்டுவதற்காக ரஜினி அழைத்திருக்கலாம், என்றும் சொல்கிறார்கள்.

உண்மை என்னவென்பது சந்தித்த அந்த இருவருக்கும்தானே தெரியும்!

 

Post a Comment