சிங்கம் III எடுப்பார்களா?

|

சிங்கம் III எடுப்பார்களா?

சிங்கம் 2 படத்தைப் பார்த்துவிட்டு அப்பா பாராட்டினார், அது எனக்கு சந்தோசமாக இருந்தது என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா அனுஷ்கா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஜூன் 5ம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியையொட்டி சென்னை தி.நகரில் உள்ள ரெசிடென்சி ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. செய்தியாளர்களிடம் பேசிய சூர்யா,

இயக்குநர் ஹரியுடன் இது எனக்கு 4 வது படம். ''இந்த வெற்றி நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வெற்றி. சரியான சமயத்தில் இந்த வெற்றி எனக்கு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் ஹரிதான். எனது தந்தை படத்தை பார்த்துவிட்டு உன்னை நினைத்தால் கவுரவமாக இருக்கிறது என ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது'' இந்தபடத்தை 'ஜோ' பார்த்துவிட்டு கைத்தட்டி பாராட்டினார் என்றார் நடிகர் சூர்யா.

இயக்குனர் ஹரி பேசுகையில், சிங்கம் 2 என்னுடைய 12 வது படம் சூர்யா உடன் 4 வது படம். சூர்யா கொடுத்த தைரியத்தில்தான் சிங்கம் 2 செய்தேன். நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்துள்ளேன். இதனால் இவர் எனக்கு சகோதரர் போல் ஆகிவிட்டார். ''சிங்கம் முதல் பாகத்திற்கு இருந்த எதிர்பார்ப்பு இரண்டாம் பாகத்திற்கும் இருந்தது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு இப்படத்தை குழுவாக சேர்ந்து உருவாக்கினோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது என்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.

அதன்பின் பத்திரிகையாளர் கேள்வியின்போது, நான்கு படங்கள் சூர்யாவுடன் இணைந்து வேலை செய்யததால் சகோதரர் என்கிறீர்கள். அனுஷ்காவுடன் இணைந்து இரண்டு படங்கள் செய்திருக்கிறீர்கள். அவரை என்ன என்று சொல்வீர்கள் என்று கேட்டனர். அதற்கு ஹரி, ''இந்த படத்தில் வேலை செய்த அனைவரும் ஒரு குடும்பம் போல்தான் பணிபுரிந்தோம். எனவே அனுஷ்கா எனக்கு சகோதரிதான் என்று சாமர்த்தியமாக பதில் சொல்லி தப்பித்தார்.

சிங்கம் III எடுப்பீர்களா என்ற கேள்விக்கு, அதற்குண்டான கதை இப்போது இல்லை என்றார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் படத்தின் இயக்குநர் ஹரி, சூர்யா, ரகுமான், நாசர், விஜயகுமார், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் மற்றும் படத்தில் நடித்த பலர் கலந்து கொண்டனர்.

 

Post a Comment