சென்னை: 'காதல் பற்றி யோசிக்காமல் படிப்பில் கவனம் செலுத்து. பின்னர் திருமணத்தை நாங்களே முன் நின்று நடத்தி வைக்கிறோம்,' என சேரன் மகள் தாமினிக்கு கவுன்சிலிங் அளிக்கப்பட்டு வருகிறது.
தாமினிக்கும், சந்துரு என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டு, அதை சேரனும் ஆரம்பத்தில் எதிர்க்காமல் விட்டுவிட்டார். திருமணம் செய்து வைக்கும் அளவுக்குத் தயாராக இருந்தார் சேரன்.
ஆனால் சந்துருவின் நடத்தை மற்றும் நோக்கம் குறித்து சந்தேகம் எழுந்ததால், இப்போது இந்தக் காதலை ஏற்க மறுக்கிறார்கள் சேரன் தரப்பில்.
ஆனால் தாமினியோ சந்துருவைத்தான் திருமணம் செய்வேன் என அடம் பிடித்து வருகிறார். விஷயம் காவல் நிலையம், நீதிமன்றம் என போய்விட்டது.
கடந்த 6-ந்தேதி இரு தரப்பினரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். பின்னர் தாமினி படித்த பள்ளிக்கூடத்தின் தாளாளர் வீட்டில் அவர் தங்கி இருக்க வேண்டும் என்றும் வருகிற 21-ந்தேதி மீண்டும் தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
சந்துருவின் குடும்பம் பணம் பறிக்கும் கும்பல் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர் சேரன் தரப்பைச் சேர்ந்த இயக்குநர்கள் அமீர், ராம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர். அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இதையெல்லாம் சேரன் மகளுக்கு விளக்கி, அவரை இப்போதைக்கு படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வைக்க ஆலோசனை கொடுக்கப்பட்டு வருகிறது.
படிப்பு முடியும் தருவாயில், சந்துருவும் உண்மையிலேயே காதலித்தால் திருமணம் செய்து வைக்கிறோம். அதுவரை எந்தப் பிரச்சினையும் செய்ய வேண்டாம் என்று அவருக்கு கவுன்சிலிங் தந்து வருகின்றனர்.
இவற்றை தாமினி ஏற்றுக் கொண்டு தந்தை பக்கம் திரும்புவாரா என்பதுதான் கேள்வி. தன் நிலையில் அப்போதும் தாமினி உறுதியாக இருந்தால் நீதிமன்றத்துக்கு வேறு வழி இல்லை. தாமினி விருப்பப்படி வாழ விடுவதைத் தவிர!
Post a Comment