சென்னை: தான் சொந்தமாகத் தயாரிக்கும் புதிய படத்துக்கு வேறு இசை அமைப்பாளரை நியமித்து ஆச்சர்யப்பட வைத்துள்ளார் முன்னணி இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார்.
வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, 30 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளவர் ஜீவி பிரகாஷ் குமார். ஏ ஆர் ரஹ்மானின் சகோதரி மகன் இவர்.
பாடகி சைந்தவியை திருமணம் செய்த கையோடு, முதன்முறையாக புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறார். ‘மதயானைக் கூட்டம்' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் கதிர் நாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். இவர்களுடன் வே.வ.ராமமூர்த்தி, விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
பாலு மகேந்திராவிடம் இணை இயக்குனராகவும், வெற்றிமாறனுடன் ‘ஆடுகளம்' படத்தில் வசனகர்த்தா மற்றும் இணை இயக்குனராக பணியாற்றிய விக்ரம் சுகுமார் இப்படத்தை இயக்குகிறார்.
தேனி மாவட்டத்தில் உள்ள இரு முக்கிய குடும்பங்களில் நடைபெறும் சம்பவங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்களை மையமாகக் கொண்டு, அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் தேனி மற்றும் கேரளாவைச் சுற்றியே நடந்து முடிவடைந்துள்ளது.
இப்படத்தின் அறிமுக போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இசையை செப்டம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். அக்டோபரில் படத்தை வெளியிடவிருக்கின்றனர்.
தான் முன்னணி இசையமைப்பாளராக இருந்தாலும், தனது சொந்தத் தயாரிப்பான இந்தப் படத்துக்கு ரகுநந்தனை இசையைக்க வைத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஜீவி பிரகாஷ். நீர்ப்பறவை, சுந்தரபாண்டியன் போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் ரகுநந்தன்.
நாட்டுப்புற இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் இது. சின்னச் சின்னதா நல்ல, புதிய விஷயங்களைச் செய்ய வேண்டும் என்பதால்தான் தன் சொந்தப் படத்துக்கு வேறு இசையமைப்பாளரை ஒப்பந்தம் செய்தாராம் ஜீவி.
Post a Comment