சென்னை: 'மெட்ராஸ் கபே' படத்தை பாராட்டிய நடிகை நீது சந்திராவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தி நடிகையான நீத்து சந்திரா, பாலிவுட்டை விட தமிழில்தான் அதிக வாய்ப்புகள் பெற்றார். ‘யாவரும் நலம்' படத்தில் அறிமுகமான இவர், பின்னர் தீராத விளையாட்டு பிள்ளை, யுத்தம் செய், ஆதிபகவன் போன்ற படங்களில் நடித்தார்.
தமிழரையும் விடுதலைப் புலிகளையும் இழிவாகச் சித்தரிக்கும் படம் என சர்ச்சைக்குள்ளாகி, தமிழகத்தில் வெளியாகாமல் போன ‘மெட்ராஸ் கபே' படத்தை சமீபத்தில் புகழ்ந்து பேசியுள்ளார் நீத்து சந்திரா.
இதனால் தற்போது கடும் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார்.
சென்னை மண்டல இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.எஸ்.சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில், " மெட்ராஸ் கபே தமிழர்களுக்கு எதிரான படம் இலங்கையில் இன அழிப்பில் ஈடுபட்ட சிங்கள அரசுக்கு ஆதரவான படமாக எடுத்துள்ளனர். விடுதலைப் புலிகள் இழிவு படுத்தப்பட்டு உள்ளனர். தமிழர்கள் உணர்வுக்கு மதிப்பளித்து தமிழகம் முழுவதும் படம் வெளியிடப் படவில்லை.
இந்த நிலையில் படத்தை புகழ்ந்து பேசி நீது சந்திரா தமிழர்கள் மனதை புண்படுத்தி உள்ளார். தமிழ் படங்களில் இவரை ஒப்பந்தம் செய்யாமல் புறக்கணிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு உள்ளார்.
Post a Comment