மங்களூர்: மங்களூரில் உள்ள ஷாரூக்கானின் பங்களா இப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து பார்த்துச் செல்லும் இடமாக மாறியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் மங்களூரை ஒட்டிய பனம்பூரில் உள்ளது இந்த ஹார்பர் ஹவுஸ் எனும் இந்த பங்களா.
வட இந்திய நடிகராக அறியப்பட்டாலும், தாய் வழியில் தான் ஒரு தென்னிந்தியர்தான் என்று சொல்வது வழக்கம். சமீபத்தில் கர்நாடக மாநிலப் பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்த ஷாருக்கான், தனது தாத்தா மங்களூர் துறைமுகத்தில் பணியாற்றியவர் என்றும், தானும் சிறு வயதில் இங்கு வசித்திருந்ததாகவும் கூறினார்.
அவருடைய பேட்டி வெளியானபின்பு, ஷாருக்கானின் பங்களாவைப் பார்வையிடுவதற்காக பள்ளிச் சிறுவர்களும், அவருடைய ரசிகர்களும் அதிக அளவில் வருவதாக அங்கு பணிபுரியும் காவலாளிகள் தெரிவித்தனர்.
1963ஆம் வருடம் ஷிமோகாவிலிருந்து ஷாருக்கானின் தாத்தா இப்திகார் அகமது மங்களூர் வந்ததாகவும், நான்கு ஆண்டுகள் அங்கு அவர் பணிபுரிந்ததாகவும் கூறுகிறார் நாகேஷ் மரோல். இவர் ஷாரூக் தாத்தாவுடன் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
அன்றைக்கு ஷாரூக்கான் குடும்பத்துக்கு காரோட்டிய டிரைவரான மெஹ்மூத் என்பவர் இப்போது மங்களூரில் வசிப்பதும் தெரிய வந்துள்ளது.
இப்போது ஷாரூக்கானுக்கு மங்களூர்வாசிகள் புதிய கோரிக்கை வைத்துள்ளனர். ஒரு முறையாவது மங்களூருக்கு வந்து தன் பங்களாவில் அவர் தங்க வேண்டும், தாத்தா பணியாற்றிய துறைமுகத்தைப் பார்க்க வேண்டும் என்பதும்தான் அது!
Post a Comment