சென்னை: மெட்ராஸ் கபே என்ற ஹிந்தி திரைப்படத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
இந்தப் படத்தின் ரிலீசுக்கு எதிராக எழிலரசு என்ற வக்கீல் தாக்கல் செய்த மனுவை நீதிபதி எஸ்.மணிக்குமார் விசாரித்தார். மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை எனக் கூறி மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
தனது மனுவில், "ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடித்த "மெட்ராஸ் கபே' திரைப்படம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கைத் தமிழர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரித்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய அமைதிப் படைக்கு எதிராக தமிழர்கள் செயல்படுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த படம் வெளியிடப்பட்டால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும். படத்தைத் தயாரிக்க இலங்கை அதிபர் ராஜபக்சே நிதியுதவி செய்துள்ளார்.
எனவே, திரைப்படத்தை தமிழக அரசும் மத்திய அரசும் இணைந்து மறு தணிக்கை செய்ய வேண்டும். அதுவரையில் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்," என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
Post a Comment