விஸ்வரூபம் 2... இந்திய தேசிய முஸ்லிம் லீக் உருவில் ஆரம்பமானது முதல் எதிர்ப்பு!

|

சென்னை: கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2' படத்துக்கு முதல் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இந்தப் படமும் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகளைக் கொண்டிருப்பதாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

‘விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளியானபோது ஏற்பட்ட நெருக்கடிகள் உலகறிந்தது. தமிழக அரசே தடை விதித்து, பின்னர் சமரச முயற்சியால், சில காட்சிகளைப் பலி கொடுத்த பிறகு அந்தப் படம் வெளியனது நினைவிருக்கலாம்.

விஸ்வரூபம் 2... இந்திய தேசிய முஸ்லிம் லீக் உருவில் ஆரம்பமானது முதல் எதிர்ப்பு!   

அதுபோல் ‘விஸ்வரூபம் 2' படமும் இப்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. இந்த படத்தையும் கமலே இயக்கி நடித்துள்ளார். தீபாவளி அல்லது நவம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்துக்கு முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது.

இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2' திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Post a Comment