ரஜினியும் நானும் பிரிந்தோம், ஜொலிக்கிறோம்.. இல்லையேல் இன்னும் ஆட்டோவில்தான் போயிருப்போம்! - கமல்

|

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினி, கமல் இணைந்து 25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படம் நினைத்தாலே இனிக்கும்.

இப்படம் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் சினிமாஸ் கோப் மற்றும் டிடிஎஸ் ஒலிப்பதிவில் மீண்டும் வெளியாகிறது. இதற்கான டிரைலர் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய கமல், "சகோதரர் ரஜினி இங்கு வரமுடியவில்லை. அதனால் நான் இங்கு வந்திருக்கிறேன். என்னால் முடியாத விழாவிற்கு அவர் செல்வார். அவருக்காக நான் செல்வேன்.

நினைத்தாலே இனிக்கும் படத்தை இப்போது நினைத்து பார்த்தாலும் இனிமையான நிகழ்வுகளே என்னை சுற்றி சுற்றி வருகிறது. நானும் ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில்தான் நானும் ரஜினியும் இனிமேல் சேர்ந்து நடிப்பதில்லை என்ற முடிவையே எடுத்தோம்.

ரஜினியும் நானும் பிரிந்தோம், ஜொலிக்கிறோம்.. இல்லையேல் இன்னும் ஆட்டோவில்தான் போயிருப்போம்! - கமல்

இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து ஒரு நாள் வெளியே வரும்போது நான் ரஜினியிடம், ரஜினி இப்ப நாம் ஒரு சம்பளத்தை வாங்கித்தான் இருவரும் பங்கு போட்டிக்கொண்டிருக்கிறோம். இதனால் இருவரும் வளர்ச்சியடைய முடியாது. நீங்கள் தனி நட்சத்திரமாகவும், நான் தனி நட்சத்திரமாகவும் நடித்தால் தான் நாம் ஜொலிக்க முடியும் என்றேன்.

அப்போது ரஜினி, பஞ்சு அருணாசலத்திடம் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்திற்காக அட்வான்ஸ் வாங்கியிருந்தார். அதனால் 'பஞ்சு அருணாசலத்திடம் நான் அட்வான்ஸ் வாங்கி விட்டேனே... என்ன செய்யலாம்?' என்றார்.

நான் உடனே பஞ்சு அருணாசலத்தை சந்தித்து 'நானும், ரஜினியும் தனித்தனியே நடித்தால் உங்களுக்கு லாபம். சேர்ந்து நடித்தால் லாபம் கம்மி. அதனால் எங்கள் இருவரையும் வைத்து தனித்தனியே படம் எடுங்கள் நடிக்கிறோம்,' என்றேன்.

அப்படி பஞ்சுவின் தயாரிப்பில் நாங்கள் இருவரும் தனித்தனியாக நடித்ததுதான் ஜப்பானில் கல்யாணராமன், ஆறிலிருந்து அறுபது வரை ஆகிய படங்கள். அப்படி அன்று நாங்கள் இருவரும் துணிந்து எடுத்த முடிவால்தான் உயரத்தில் இருக்கிறோம்.

தொடர்ந்து நானும், ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்து வந்திருந்தால் இன்று நானும், ரஜினியும் ஆட்டோவில்தான் பயணம் செய்து கொண்டிருப்போம்.

34 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான நினைத்தாலே இனிக்கும் படத்திற்காக மீண்டும் இத்தனை வருடங்கள் கழித்து இயக்குனர் பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியரோடு நானும் இந்த மேடையில் நிற்பது ஆச்சரியமான விஷயம்.

பாலச்சந்தர்தான் நான் இயக்குநராகக் காரணம். நானும் பாலச்சந்தரும் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்பது என் ஆசை.. நடக்குமா, பார்க்கலாம்!" என்றார்.

 

Post a Comment