சென்னை: தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி ஏற்ற நேரம் பார்த்து நாட்டின் குடியரசுத் தலைவரும் முதல்வரும் பங்கேற்கும் ஒரு பிரமாண்ட மேடை கிடைக்கிறதே என சந்தோஷப்பட்ட கேயாருக்கு, இப்போது அதில் மண்.
சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சியின் மேடையில் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தலைவர் கல்யாண், தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், பெப்சி சம்மேளன தலைவர் அமீர் இவர்களோடு சேர்ந்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயாரும் கௌரவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்படித்தான் நிகழ்ச்சி நிரலும் அமைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் கேயார் அணி ஜெயித்தது சட்டப்படி செல்லாது என்று தாணு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், 'கேயார் அணியில் ஜெயித்தவர்கள், தலைவர் உள்பட அந்தந்த பதவியில் செயலாற்ற 27ம்தேதி வரை தடைவிதிக்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சங்க பிரதிநிதி என்ற முறையில் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் கவுன்சிலில் கூட்டம் நடத்தவும் தடை விதிக்கபடுகிறது' என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுவிட்டது.
இதனால் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கேயார் மேடையில் அமரும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.
ஆனால் நேற்று முதல்வரைச் சந்திக்கச் சென்ற குழுவில் கேயாரும் இடம்பெற்றிருந்தார். செய்திக் குறிப்பிலும் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கவனித்த தாணு அணி, இதை நீதிமன்ற அவமதிப்பாகக் கூறி வழக்கு தொடரப் போவதாகக் கிளம்பியுள்ளனர்.
Post a Comment