சென்னை: தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் தான் எந்த குறிப்பிட்ட அணியையும் ஆதரிக்கவில்லை என்று விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் ஒரு அணிக்கு நடிகர் விஜய்யின் ஆதரவு உள்ளதாக செய்திகள் வந்தன.
இந்நிலையில் இது குறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நான் ஹைதராபாத்தில் நடக்கும் ‘ஜில்லா' படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறேன். தயாரிப்பாளர் சங்க தேர்தலில் குறிப்பிட்ட ஒரு அணியை நான் ஆதரிப்பதாக வதந்தி பரவியுள்ளது. பலர் என்னிடம் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்ட வண்ணம் உள்ளனர். நான் எந்த அணியையும் ஆதரிக்கவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன்.
இரண்டு அணிகளிலும் என்னை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்கள் உள்ளனர். எல்லா தயாரிப்பாளர்களுக்கும் நான் பொதுவானவன். இந்த தேர்தலில் வெற்றி பெறும் அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் எனது வாழ்த்துக்களை முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Post a Comment