சென்னை: ஆசிரியர் தின விழா அன்று ரஜினிகாந்த் தனது பள்ளி ஆசிரியைக்கு ரூ.3 லட்சம் அளித்துள்ளார்.
ஆசிரியர் தின விழா அன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தனது பள்ளி ஆசிரியை சாந்தம்மாவின் நினைவு வந்துள்ளது. உடனே அவர் தனது உதவியாளரை அழைத்து சாந்தம்மாவை அணுகி தான் அடுத்த முறை பெங்களூர் வரும்போது அவரை சந்திப்பதாக தெரிவித்துவிட்டு அவருக்கு என்ன உதவி வேண்டும் என்று கேட்குமாறு தெரிவித்துள்ளார்.
விசாரித்ததில் சாந்தம்மா தனது கணவருடன் ஒரு குடிசையில் கஷ்டப்படுவது தெரிய வந்தது. அவரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு ரூ.3 லட்சம் பணம் வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவரது வங்கிக் கணக்கில் ரூ.3 லட்சம் போடுமாறு ரஜினி தெரிவித்துள்ளார்.
இது குறித்து சாந்தம்மா கூறுகையில்,
நான் சிவாஜி ராவுக்கு 5ம் வகுப்பு முதல் 7ம் வகுப்பு வரை பாடம் எடுத்தேன். அவன் படிப்பு நேரத்தை தவிர மற்ற நேரங்களில் அதிகம் சேட்டை செய்வான். அவன் கையெழுத்து அழகாக இருக்கும். அவன் தலையெழுத்தும் நன்றாக இருக்கும் என்று அப்போதே நினைத்தேன். அது போன்றே அவன் யாரும் நினைத்துக் கூட பார்க்காத உயரத்தில் இருக்கிறான். நான் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் நிலைமையில் அவன் இருக்கிறான். ஆனால் எனக்கு என்ன தேவையோ அதை மட்டும் கேட்டேன் அவனும் கொடுத்துள்ளான்.
அவன் மேலும் நன்றாக இருக்க வேண்டும். ஆண்டவன் அவனுக்கு நீண்ட ஆயுளை அளிக்க வேண்டும் என்றார்.
Post a Comment