சென்னை: ஒரு அரசியல்வாதி என்பதைத் தாண்டி தமிழ் சினிமாவுக்கு கடந்த 65 ஆண்டு காலமாக கதை வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, தயாரிப்பாளராக பங்களித்து வரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியை சினிமா நூற்றாண்டு விழாவுக்கு அழைப்பது குறித்து தெளிவாக பதிலளிக்க மறுத்துவிட்டனர் விழாக் குழுவினர்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) தலைவர் கல்யாண் சென்னையில் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், "நாளை மறுதினம், 21-ம் தேதி மாலை சினிமா நூற்றாண்டு விழா தொடங்குகிறது. இதனையொட்டி, நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஒத்திகை நேரு உள்விளையாட்டு அரங்கில் தினமும் நடைபெறுகிறது.
விழாவுக்காக, இதுவரை பார்த்திராத அளவில் மிகப்பிரமாண்டமான முறையில் மேடை அமைக்கப்படுகிறது.
முதல்வர் ஜெயலலிதா சினிமா நூற்றாண்டு விழா பற்றி தினமும் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் விவாதித்து வருகிறார்.
முதல்வர் ஜெயலலிதா எங்களையெல்லாம் அழைத்து பேசினார். சினிமா நூற்றாண்டு விழாவுக்காக எவ்வளவு செலவு ஆகும் என்று விசாரித்தார். ஏறக்குறைய ரூ.30 கோடி செலவாகும் என்று தெரிவித்தோம். உடனே, தமிழக அரசு சார்பில் அவர் ரூ.10 கோடி நிதி உதவி வழங்கினார்.
சினிமா நூற்றாண்டு விழா கலைநிகழ்ச்சிகளுக்கு சிலர் ஒத்துழைப்பு தருவதில்லை. இந்த விழாவில் கலந்துகொண்டால்தான் சினிமாவில் அவர்கள் இருப்பது தெரியும். அல்லது சினிமாவிலேயே இல்லாததுபோல் ஆகிவிடும்," என்றார்.
கருணாநிதிக்கு அழைப்பு உண்டா?
அவரிடம், 'சினிமா நூற்றாண்டு விழாவுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதி அழைக்கப்படுவாரா?' என்று கேட்டார்.
அதற்கு 'பிலிம் சேம்பர்' தலைவர் கல்யாண் நேரடியாக பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் தயங்கிவிட்டு, 'சினிமா துறையை சேர்ந்த அனைவரும் அழைக்கப்படுவார்கள்' என்று மட்டும் கூறினார்.
விழாவுக்கு அழைக்கப்படுபவர்கள் யார் யார் என்பதை முதல்வர் அலுவலகமே முடிவு செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment