சென்னை: முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல திரையுலகில் பல படங்களை வெளியிடத் தோள் கொடுத்து வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம், என அந்த நிறுவனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனம் இனி சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை:
முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல திரையுலகில் பல படங்களை வெளியிடத் தோள் கொடுத்து வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம். இந்நிறுவனப் பெயர் சம்பந்தப் பட்டு விட்டாலே அந்தப் படத்தின் வணிகத் தகுதி கூடி பார்வையாளர் பரப்பளவும் அதிகரித்து வந்திருக்கிறது.
அரவான் தொடங்கி...
வேந்தர் மூவீஸ் 'அரவான்' படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்து, 'சகுனி' 'எதிர்நீச்சல்' போன்று விரிந்து அண்மைப் படமான 'தலைவா' வரை தயாரிப்பு, வெளியீடு என 28 படங்களை வழங்கியுள்ளது.
மலையாளத்திலும்...
தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரவேசிக்கும் இந்நிறுவனம், திலீப் நடிக்கும் 'நாடோடி மன்னனை' அடுத்த மாதம் வெளியிடுகிறது. தமிழில் வெற்றி பெற்ற 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை மலையாளத்தில் தயாரிக்க இருக்கிறது. 'நேரம்' படநாயகன் நவின்பாலி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் இயக்குகிறார்.
மாருதி கிரியேஷன்ஸ்
இதுவரை பல வகையிலான பெரிய பெரிய பிரமாண்டப் படங்களில் பங்களிப்பு செய்த வேந்தர் மூவீஸ், தனது சகோதர நிறுவனமாக "மாருதி கிரியேஷன்ஸ்" என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.
சஞ்சீவி மூலிகை மாதிரி..
"இராமாயணத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த ராம, லெட்சுமணனை அனுமனான அந்த மாருதி ,சஞ்சீவி மூலிகை மலையைக் கொண்டு வந்து மீட்டார். அது போல இந்த மாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம், தரமான புதிய சிறுமுதலீட்டுப் படங்களைத் தேர்ந்தெடுத்து மீட்டு வெளியிடும். வெளிச்சம் பெற வேண்டிய சிறு படங்களுக்கு
இது அரிய வாய்ப்பாக அமையும். சின்ன படங்களில் நல்ல படங்களுக்கு இனிக் கவலை இல்லை என்று திரையுலகினர் வரவேற்பார்கள் என்பது நிச்சயம்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ் மதன்
இது பற்றி வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் கூறும் போது "வேந்தர் மூவீஸ் இதுவரை 28 படங்களை வழங்கியுள்ளது. எல்லாமே வெற்றிப் படங்கள். வேந்தர் மூவீஸ் சம்பந்தப் பட்டு விட்டாலே அந்தப் படத்தின் வணிகமதிப்பும் வெற்றி வாய்ப்பும் அதிகரித்து வந்திருக்கிறது. இந்நிலையில் பட்ஜெட் படங்கள் எனப்படும் சிறு முதலீட்டுப் படங்களை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்டுள்ளதுதான் மாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம். தகுதியுள்ள தரமான படங்களை இதன் மூலம் வெளியிட இருக்கிறோம். இது திரையுலகில் புதிய வெளிச்சமாக இருக்கும் என்று நம்பலாம்,'' இவ்வாறு எஸ்.மதன் கூறினார்.
டி சிவா
தயாரிப்பாளர் டி சிவாதான் மாருதி கிரியேஷன்ஸின் கௌரவ ஆலோசகர். இவர்தான் ஆரம்பத்தில் வேந்தர் மூவீஸின் ஆலோசகராகவும் இருந்தார். இவரது சொந்த நிறுவனம்தான் அம்மா கிரியேஷன்ஸ்.
Post a Comment