சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் புகையிலை விளம்பரத்தைக் கிண்டலடிக்கும் சந்தானம் தொடர்பான காட்சியை நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ராஜேஷ்.
கார்த்தி - காஜல் நடிக்க, ராஜேஷ் இயக்கியுள்ள படம் ஆல் இன் ஆல் அழகுராஜா. இந்தப் படத்தில் சந்தானம் ஒரு காட்சியில், புகையிலை மற்றும் குட்கா எதிர்ப்பு விளம்பரத்தை கிண்டலடிப்பது போல காட்சி உள்ளது. இது ட்ரைலரில் இடம் பெற்றதால் கடும் எதிர்ப்புக்குள்ளானது.
தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம் இதுகுறித்து தமிழக அரசிடம் புகார் தெரிவித்தது. குட்கா சாப்பிட்டு புற்றுநோயால் இறந்த முகேஷ் என்ற மனிதன் தன் குரலால் நாட்டு மக்களை எச்சரிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த விளம்பரத்தைக் கிண்டலடிப்பதா என கண்டனம் தெரிவித்திருந்தது அந்த அமைப்பு.
சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாட்டு மக்கள் மன்றம்.
இந்த நிலையில் அந்தக் காட்சியே புகையிலைக்கு எதிரான பிரச்சாரம் என்று விளக்கமளித்திருந்தார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் எதிர்ப்பு தொடர்ந்ததால் இப்போது அந்தக் காட்சியை நீக்குமாறு சென்சார் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்கிவிட்டதாக அறிவித்துள்ளார் ராஜேஷ்.
Post a Comment