சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்.. இயக்குநர் மறுப்பு!

|

சரவணன் என்கிற சூர்யா: தலைப்பை மாற்ற சூர்யா தரப்பு புகார்..  இயக்குநர் மறுப்பு!

சென்னை: சரவணன் என்கிற சூர்யா என்ற தலைப்பை மாற்றுமாறு நடிகர் சூர்யா தரப்பு நடிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் புகார் செய்துள்ளது. ஆனால் தலைப்பை மாற்ற முடியாது என அப்படத்தின் இயக்குநர் மறுத்துவிட்டார்.

சரவணன் என்கிற சூர்யா' என்ற பெயரில் ஒரு புது படம் தயாராகிறது. இதை ராஜா சுப்பையா இயக்குகிறார். நடிக்க வரும் முன் சூர்யாவின் பெயர் சரவணன் என்பதுதான். சினிமாவுக்காக சூர்யா என மாற்றினார்கள்.

எப்படிப் பார்த்தாலும் தலைப்பு சூர்யாவைக் குறிப்பதாக உள்ளதால் மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர் சூர்யா தரப்பில்.

சூர்யா ரசிகர்களும் தலைப்பை மாற்றும்படி கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து சூர்யா தரப்பில் கூறும்போது தலைப்பை மாற்றும்படி வற்புறுத்தி நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். நடிகர் சங்கமும் இதனை தயாரிப்பாளர் சங்கத்துக்கு அனுப்பி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றனர்.

மாற்ற முடியாது

ஆனால் இயக்குநர் ராஜா சுப்பையா தலைப்பை மாற்ற முடியாது என மறுத்துவிட்டார்.

"இந்தப் படத்தின் கதைக்கு சரவணன் என்கிற சூர்யா தலைப்பு பொருத்தமாக இருந்ததால் வைத்தோம். படத்தில் நடிகர் சூர்யாவை இழிவு படுத்துவது போல் காட்சிகள் எதுவும் இல்லை. இதே தலைப்பில் வசனங்கள் இடம் பெற்றுள்ளன. நிறைய செலவில் விளம்பரங்களும் செய்துவிட்டோம். இப்போது தலைப்பை மாற்ற முடியாது," என்கிறார் ராஜா சுப்பையா.

 

Post a Comment