எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணியாத போராளி ராமச்சந்திர ஆதித்தனார்!- பாரதிராஜா

|

சென்னை: தமிழின உணர்வில் எந்த நிர்பந்தங்களுக்கும் அடிபணியாத ஒரு போராளியாய் நின்றவர் பா ராமச்சந்திர ஆதித்தன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.

மாலை முரசு' நிர்வாக ஆசிரியரும் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனுமான பா.இராமச்சந்திர ஆதித்தன் நேற்று காலை காலமானார்.

எந்த நிர்பந்தத்துக்கும் அடிபணியாத போராளி ராமச்சந்திர ஆதித்தனார்!- பாரதிராஜா

அவருடைய மறைவுக்கு திரைப்பட இயக்குனர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

உலகெங்கும் வாழும் தமிழ் மக்களிடையே இன்றவும் தமிழ் மொழி பேச்சாகவும், எழுத்தாகவும், செம்மொழியாகவும் உயர்ந்து, தமிழ் நெஞ்சங்களில் எல்லாம் உயர்த்தெழுவதற்கு முக்கிய பங்காக ‘தினத்தந்தி' குழுமத்தைக் கூறலாம்.

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டுக்கு மேலாக ‘தினத்தந்தி', ‘மாலை முரசு' செய்தித்தாள்கள் வாயிலாக தமிழ் மொழியை பட்டிதொட்டி எங்கும் பாமரனும் எளிதாக புரிந்து கொண்டு வாசித்து, எழுதி, நேசித்து தமிழன் என்ற அடையாளத்தோடு நிமிர்ந்து நிற்க இன்றளவும் தமிழனின் பின்புலமாக நின்று போராடிக் கொண்டிருக்கிறது.

தமிழர்களுக்கு நேரிடையாகவும், ‘மாலை முரசு' செய்தித்தாள் வழியாகவும் ஒரு தமிழனாய் நின்று ஈழத் தமிழர் பிரச்சினையில், எந்த அரசுக்கும் அடி பணியாமல் நிர்பந்தங்களுக்கு உட்படாமல், இன்றுவரை போராடிய ஒரு போராளி, இராமச்சந்திரன் ஆதித்தனார் இன்று நம்மிடையே இல்லை என்று அறியும்போது என் நெஞ்சம் கணக்கிறது, கண்கள் பனிக்கின்றன.

என் ஆத்மார்த்த நண்பராகவும், தமிழன் என்ற ஒரு இன பற்றுதலில் என்னை தன் நெஞ்சில் வைத்து எந்த சூழ்நிலையிலும் என்னை உயர்த்தியே மதிப்பிட்டு என்னை ஊடகத்தின் வாயிலாக ஊனப்படுத்தாமல், உயர்வாகவே சித்தரித்த என் மரியாதைக்குரிய இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களின் மறைவு அவரது குடும்பத்துக்கு மட்டும் ஏற்பட்ட இழப்பு அல்ல!

அனைத்துலக தமிழர்களும் அந்த தென்பாண்டித் தமிழனை, அவர் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம். அவருடைய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட இழப்பில் பங்கேற்று, உலகத் தமிழர்கள் அனைவரும் நம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வோம்," என்று கூறியுள்ளார்.

 

Post a Comment