சென்னை கோர்ட்டுக்கு வெளியே பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

|

சென்னை கோர்ட்டுக்கு வெளியே பவர் ஸ்டாரை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார்

சென்னை: சென்னையில் பவர் ஸ்டார் சீனிவாசனை சுற்றி வளைத்த சிவகாசி போலீசார் அவர் முன்ஜாமீனை காட்டியதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

லத்திகா படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் பவர்ஸ்டார் சீனிவாசன். கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் மிகவும் பிரபலமானார். இதையடுத்து பல்வேறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தற்போது ஷங்கரின் ஐ படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையே அவர் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பலரிடம் கமிஷன் வாங்கி ஏமாற்றியதாக போலீசில் புகார்கள் குவிந்தன. அவர் தமிழகம் தவிர ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்தவர்களையும் ஏமாற்றியது தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். இதைத் தொடர்ந்து டெல்லியைச் சேர்ந்த ஒருவரிடம் கமிஷன் வாங்கிக் கொண்டு அவரிடம் கூறியது போன்று ரூ.50 கோடி கடன் வாங்கித் தராததால் டெல்லி போலீசாரும் பவர் ஸ்டாரை கைது செய்தனர்.

டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்ட பவர் சில மாதங்கள் கழித்து வெளியே வந்தார். ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்துள்ள பவர் பழையபடி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த பவர், தான் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுவிட்டதாகவும், இனி தன்னை பல படங்களில் பார்க்கலாம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக பவர் நேற்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்தார். அப்போது அவரை சிவகாசி போலீசார் கைது செய்ததாக தகவல் பரவியது. மேலும் அவரை சிவகாசிக்கு கொண்டு சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் உண்மையில் பவரை போலீசார் சுற்றி வைளைத்தபோது அவர் முன்ஜாமீனை காட்டியுள்ளார். இதையடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

 

Post a Comment