மும்பை: நிஜ வாழ்க்கையிலும் ரஜினி ஒரு ஹீரோ... அவருடன் பணியாற்றுவது ஒரு பெருமை என்று கூறியுள்ளார் பாலிவுட் ஹீரோ ஹ்ரித்திக் ரோஷன்.
பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் புகழ் பாடுவது இப்போது சகஜமாகிவிட்டது. குறிப்பாக அவர்களின் புதிய படங்கள் வெளியாகும்போது, ரஜினிக்கு செலுத்தும் மரியாதையே தனி!
இப்போது அந்தப் பட்டியலில் ஹ்ரித்திக் ரோஷனும் இடம் பெற்றுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிதான் தனக்குப் பிடித்த ஹீரோ என்று குறிப்பிட்டுள்ள அவர், ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக தான் நடித்ததை நினைவு கூர்ந்துள்ளார்.
1986-ல் வெளியான பகவான் தாதா படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் ஹ்ரித்திக்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எத்தனையோ ஹீரோக்கள் இருந்தாலும், ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றத்தான் நான் பெரிதும் விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன் அவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நான் நடித்துள்ளேன். ரஜினி மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு.
அவர் எனக்கு வழிகாட்டியைப் போன்றவர். ஒரு உதாரண புருஷராக நின்று எனக்கு பல விஷயங்களைக் கற்றுத் தந்திருக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அவரே ஹீரோ. என் தந்தைக்கு நிகராக நான் மதிக்கும் மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றுவது மிகப் பெரிய பெருமை," என்றார்.
ஹ்ரித்திக் ரோஷனின் தந்தை ராகேஷ் ரோஷனும் ரஜினியும் பல ஆண்டுகளாக நண்பர்களாகத் திகழ்கிறார்கள். சில படங்களில் இணைந்து நடித்தும் உள்ளனர்.
Post a Comment