நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

|

சென்னை: காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் அகற்றக்கூடாது என்று தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

காமராஜர் சாலையில் காந்தி சிலை எதிரில் சிவாஜி கணேசன் சிலை வைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலையால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், ஒருபக்கம் வரும் வாகனங்களை மறைப்பதாகவும் கூறி, அச்சிலையை அகற்ற உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நடிகர் திலகத்தின் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது!- இயக்குநர்கள் சங்கம்

இதுகுறித்து விளக்கம் தருமாறு உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், சிவாஜி கணேசன் சிலையை எக்காரணம் கொண்டும் அகற்றக் கூடாது என திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் விக்ரமன், பொருளாளர் வி சேகர், செயலாளர் ஆர்கே செல்வமணி ஆகியோர் விடுத்துள்ள போக்குவரத்து காவல் ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "நடிகர் திலகம் செவாலியே சிவாஜிகணேசன் தமிழகத்தின் தவப்புதல்வன். திரைத்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேல் அரிய சாதனைகள் புரிந்தவர் என்பது உலகறியும்.

தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனையும் வ உ சிதம்பரம் பிள்ளையையும் உலக மக்கள் கண்முன் நடமாட வைத்து விருதுகள் பல பெற்றவர்.

தமிழர் நெஞ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும் அமரர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் அமைத்திருப்பது நமக்கெல்லாம் பெருமையான ஒன்றாகும்.

அவரது திரு உருவச் சிலையை அங்கிருந்து அகற்றுவது நம் நெஞ்சிலே ஈட்டியைப் பாய்ச்சுவதற்கு ஒப்பாகும்.

நடிகர் திலகத்தின் சிலையை அகற்றக்கூடாது, அங்கேயே இருக்க வேண்டும் என்ற நல்ல கருத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

-இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

 

Post a Comment