சென்னை: இந்திய கிரிக்கெட் வாரிய உறுப்பினராகியுள்ளார் முன்னணி தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம்.
2006-ம் ஆண்டு வெளியான ‘திருட்டு பயலே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக கால்பதித்த நிறுவனம் ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளர் கல்பாத்தி எஸ்.அகோரம்.
தொடர்ந்து ‘சந்தோஷ் சுப்பிரமணியம்', ‘இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம்', ‘மதராச பட்டணம்', ‘எங்கேயும் காதல்', ‘யுத்தம் செய்', ‘அவன் இவன்', ‘மாற்றான்' உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களைத் தயாரித்துள்ளார். தயாரிப்பு மட்டுமின்றி ‘கந்தக்கோட்டை', ‘மைனா', ‘பயணம்' உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராகவும் இருந்துள்ளார்.
தமிழ்த் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்.
கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்டி வந்த கல்பாத்தி அகோரம் சமீபத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மார்க்கெட்டிங் கமிட்டியின் உறுப்பினராகவும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கிடைத்துள்ள பெரிய மரியாதையாக இது பார்க்கப்படுகிறது.
ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பில் தற்போது ஐந்து பெரிய பட்ஜெட் படங்கள் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment