லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கே லஞ்சம் கேட்கும் தமிழக அமைச்சர்! - இயக்குநர் கிளப்பும் பரபரப்பு

|

லஞ்சத்தை எதிர்க்கும் படத்துக்கே லஞ்சம் கேட்கும் தமிழக அமைச்சர்! - இயக்குநர் கிளப்பும் பரபரப்பு

சென்னை: லஞ்ச ஊழலை அம்பலப்படுத்தும் வகையிலும், தகவலறியும் உரிமைச் சட்டத்தை பிரபலப்படுத்தும் நோக்கிலும் எடுக்கப்பட்ட அங்குசம் என்ற படத்துக்கு வரி விலக்கு தர தமிழக அரசு லஞ்சம் கேட்பதாக புதிய இயக்குநர் ஒருவர் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

வேலூரைச் சேர்ந்த மனுக்கண்ணன் இயக்கும் முதல் படம் அங்குசம். இவர் திருச்சி அருகே நடந்த ஒரு நிஜக் கதையை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்துள்ளாராம்.

அங்குசம் படம் தணிக்கை செய்யப்பட்டு யு சான்றிதழ் பெற்றது. இந்தப் படத்துக்கு வரிவிலக்கு கேட்டு தமிழக வணிக வரித்துறை அமைச்சர் ரமணாவை அணுகியபோது, அவரது அதிகாரப்பூர்வ பிஏ சரத்பாபு என்பவர் ரூ 5 லட்சம் லஞ்சம் கேட்டதாகப் புகார் கூறியுள்ளார்.

மேலும் பெரிய படத்துக்கு ரூ 50 லட்சமும், சின்னப் படமென்றால் ரூ 5 லட்சமும் கட்டாயமாகக் கொடுத்தால்தான் வரிவிலக்குக் கிடைக்கும் என சரத்பாபு கறாராகக் கூறியதாக நக்கீரன் புலனாய்வு இதழில் விரிவாக பேட்டியளித்துள்ளார் மனுக்கண்ணன்.

மேலும் இப்படி வாங்கும் பணத்தில் ஒரு பங்கு முதல்வருக்கும் தரப்படுவதாக அந்தப் பிஏ குறிப்பிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

அமைச்சரின் பெயர், பிஏவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டு, இருவரும் வரிவிலக்கு தர லஞ்சம் கேட்டதாக அனைத்து பத்திரிகைகளுக்கும் தன் பேட்டியையே செய்தியாகவும் அனுப்பி வருகிறார்.

 

Post a Comment