பழைய நடிகைகள் மீண்டும் நடிக்க வருவது ஒன்றும் புதிதில்லை. எண்பதுகளில் பெரும் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவரான அர்ச்சனா மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
ஏற்கெனவே அவர் ஒன்பது ரூபாய் நோட்டு, பரட்டை போன்ற படங்களில் நடித்திருந்தாலும், இப்போது முதல் முறையாக டிவியில் நடிக்கிறார்.
தாசி, வீடு, நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் மறக்க முடியாத நடிப்பைத் தந்தவர் அர்ச்சனா.
நடிப்பை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும் ஒன்பது ரூபாய் நோட்டு, பரட்டை என்கிற அழகுசுந்தரம் போன்ற படங்களில் நடித்தார்.
பின்னர் 6 ஆண்டுகள் நடிக்கவில்லை. இடையில் நிறைய அர்ச்சனாக்கள் சினிமாவிலும் சீரியல்களிலும் வந்துவிட்டனர்.
இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்த முறை சின்னத் திரையில்.
‘உணர்வுகள்' என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகப்படுத்துகிறார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
இதுகுறித்து இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், "ஒவ்வொரு அழகான, ஆச்சர்யமான, நெகிழ்ச்சியான உணர்வுகளின் தொகுப்புதான் உணர்வுகள்.
சின்னத்திரை தொடர் பார்க்கும் உணர்வு இல்லாமல் வெள்ளித்திரையில் திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்தும் தொடராக உணர்வுகள் இருக்கும். தேவாவின் இசையில், சஞ்சய் பி.லோக்நாத் ஒளிப்பதிவில், எல்.சேக்கிழார் திரைக்கதையில், ஜான் மகேந்திரன் வசனத்தில் வரும் திங்கட்கிழமை முதல் ‘புதுயுகம்' தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகிறது," என்றார்.
Post a Comment