'நாங்க கிண்டலடிக்கவே இல்லை... சந்தானமே சிகரெட்டுக்கு எதிராதானே பிரச்சாரம் பண்றார்!' - ராஜேஷ்

|

'நாங்க கிண்டலடிக்கவே இல்லை... சந்தானமே சிகரெட்டுக்கு எதிராதானே பிரச்சாரம் பண்றார்!' - ராஜேஷ்

சென்னை: ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் குட்காவுக்கு எதிரான விளம்பரத்தை கிண்டல் செய்துள்ளதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையில், சந்தானம் சொல்வதைக் கேட்டபிறகு சிகரெட் பிடிப்பதையே விட்டுவிடுவதுபோலத்தான் காட்சி வைத்துள்ளோம், என்று இயக்குநர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

ராஜேஷ் இயக்கத்தில் கார்த்தி, காஜல், சந்தானம் நடித்து தீபாவளிக்கு ரிலீஸாகவிருக்கும் படம் ஆல் இன் ஆல் அழகுராஜா.

ரிலீசாகும் நேரத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது இந்தப் படம். அது படத்தின் ட்ரைலரில் இடம்பெற்ற குட்கா - சிகரெட் எதிர்ப்பு விளம்பரத்தை சந்தானமும் கார்த்தியும் கிண்டலடிக்கும் காட்சி.

பொதுமக்கள் புகையிலை பயன்படுத்துவதை நிறுத்துவதற்காக, புகையிலையினால் பாதிக்கப்பட்ட முகேஷ் இறக்கும் தருவாயில் விடுக்கும் வேண்டுகோளை புகையிலை விழிப்புணர்விற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் திரையிடுகிறார்கள்.

ஆல் இன் ஆல் அழகுராஜா திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இந்த முகேஷை சந்தானம் கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருப்பதால், படத்திலிருந்து காட்சிகளை நீக்க வேண்டும் அல்லது படத்தைத் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு புகையிலை கட்டுப்பாடு மக்கள் மன்றத்தினர் சுகாதார செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குனர் ராஜேஷிடம் பேசியபோது, "இந்தப் படத்தில் புகையிலை ஒழிப்பிற்கு எதிராக நாங்கள் எந்த காட்சியும் வைக்கவில்லை. உண்மையில் நாங்களும் புகையிலைக்கு எதிரான பிரச்சாரத்தை ஜனரஞ்சமாக சொல்லியிருக்கிறோம்.

அந்த காட்சியை நன்றாக புரிந்துகொண்டால், முகேஷைப் பற்றி சந்தானம் காமெடியாக சொல்வதும், அதைக் கேட்ட பிறகு கார்த்தி சிகரெட் பிடிப்பதையே விட்டுவிடுவதுமாகத்தான் காட்சி அமைத்துள்ளோம். இத்தனைக்கும் எங்கள் படத்துக்கு யு சான்று கொடுத்துள்ளார்கள்," என்றார்.

 

Post a Comment