என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம்!- நஸ்ரியா

|

சென்னை: என்னையும் என் குடும்பத்தாரையும் கேவலமாகப் பேசினார் இயக்குநர் சற்குணம் என்று நடிகை நஸ்ரியா கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் சென்னை எழும்பூரில் உள்ள கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த நஸ்ரியா கொடுத்துள்ள புகார் விவரம்:

Nazria Complaint Nazria ComplaintNazria Complaint

நான் கேரளாவில் பாரம்பரியமான இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவள். தமிழ்- மலையாளத்தில் நல்ல டீசன்டான வேடங்களில் மட்டுமே நடித்துள்ளேன்.

தமிழில் தற்போது நய்யாண்டி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்தப் படம் வரும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தில் நான் நடிக்காத ஒரு காட்சி, நான் நடித்தது போல எடுக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவரை வைத்து எடுத்த அந்தக் காட்சியை படத்தின் ட்ரைலரில் சேர்த்து யு ட்யூபில் வெளியிட்டுள்ளனர். இதைப் பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பின்போது, குறிப்பிட்ட அந்தக் காட்சி எனக்கும் என் குடும்பத்துக்கும் என் மதத்துக்கும் சரியாக வராது என்று தெரிந்ததால் அந்தக் காட்சியில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்.

இது தொடர்பாக எனக்கும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்து, முடிவில் அந்தக் காட்சி இல்லாமலேயே பாடலை முடிக்க ஒப்புக் கொண்டார்கள்.

ட்ரைலரைப் பார்த்த பிறகு இயக்குநர் சற்குணத்துக்கு போன் செய்து ஏன் இப்படி பண்ணீங்க என்று கேட்டேன். உடனே அவர் என்னை மோசமாகத் திட்டினார். என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டியதோடு, நான் சார்ந்த முஸ்லிம் சமூகத்தையும் மிகக் கேவலமாகப் பேசினார். முதல்வர் அலுவலகத்தில் எனக்கு எதிராகப் புகார் தருவதாகக் கூறி மிரட்டினார்...

இதுகுறித்து தயாரிப்பாளர் கதிரேசனைத் தொடர்பு கொண்ட போது அவர் வேண்டுமென்றே தவிர்த்தார்.

கமிஷனர் அவர்களே, எனக்கும், என் குடும்பத்துக்கும், நான் சார்ந்த மதத்துக்கும் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்!"

-இவ்வாறு நஸ்ரியா புகார் செய்துள்ளார்.

 

Post a Comment