சென்னை: உயர் நீதிமன்ற தடையை மீறி முக்கிய முடிவு எடுத்ததாக தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் மீது எஸ். தாணு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இதில் கேயார் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை எதிர்த்து எதிரணியைச் சேர்ந்த தயாரிப்பாளர் எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் 17-9-2013 அன்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில், சங்க விதிகளுக்கு எதிராக கேயார் அணி செயல்பட்டு வெற்றி பெற்றது என்று தெரிவித்திருந்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், கேயார் அணி அன்றாடப் பணிகளை செய்யலாமே தவிர முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் எஸ். தாணு சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் கொள்கை முடிவு எடுக்க கோர்ட் தடை விதித்துள்ளது. ஆனால் அக்டோபர் 13-ம் தேதி பத்திரிகைகளுக்கு கேயார் அளித்த பேட்டியில் தங்களுக்கு கோர்ட் அப்படி ஒரு தடை விதிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.
அத்துடன் புதிய திரைப்படத்தின் பாடல் - இசை வெளியீட்டு விழாக்களில் அந்தப் படத்தில் நடித்த நடிகர்- நடிகைகள் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு எடுத்து இருப்பதுடன், விழாக்களில் பங்கேற்காத நடிகைகள் காஜல் அகர்வால், சரண்யா மோகன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு தயாரிப்பாளர் கவுன்சில் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. எனவே இது கோர்ட் அவமதிப்பு குற்றமாகும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி சுப்பையா இது குறித்து கேயார் ஒரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
Post a Comment