டெல்லி: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே நடித்துள்ள ராம் லீலா படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பிரபு சமாஜ் தர்மிக் ராம் லீலா குழு உள்பட 6 பேர் டெல்லி நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது,
ராம் லீலா படம் இந்துக்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும் வகையில் உள்ளது. ஏனென்றால் அதில் செக்ஸ், வன்முறை மற்றும் ஆபாசம் உள்ளது. ராம் லீலா என்பது கடவுள் ராமரின் பெயரோடு தொடர்புடையது. இதனால் மக்கள் ராமரின் வாழ்க்கை பற்றிய படம் என்று நினைத்து தியேட்டருக்கு செல்வார்கள். அப்படி சென்று படம் பார்த்தால் அது அவர்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தும். அதனால் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ஜெயசந்திரா படத்தை ரிலீஸ் செய்ய இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார்.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள ராம் லீலா படம் நாளை மறுநாள் அதாவது 15ம் தேதி ரிலீஸாகவிருந்தது. இந்நிலையில் தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக படத்திற்கு தடை கோரி என்.ஜி.ஓ. ஒன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததுடன், என்.ஜி.ஓ.வுக்கு ரூ.50,000 அபராதம் விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment