இப்போதெல்லாம் எந்த சினிமா விழாவுக்குப் போனாலும், கிராமங்கள் தோறும் மினி திரையரங்குகள் அமைத்து, தியேட்டர் பற்றாக்குறையைத் தீர்க்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கேயார்.
சமீபத்தில் நடந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் இந்தக் கோரிக்கையை முன் வைத்தார்.
ரூ 50 லட்சத்தில்...
அவர் கூறுகையில், "தமிழ் பட உலகில் இப்போது உள்ள மிக முக்கிய பிரச்சினை, படங்களை திரையிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்காததுதான். தியேட்டர்களுக்கு லைசென்சு பெறும் விதிமுறைகளை, அரசு எளிமைப்படுத்த வேண்டும்.
குறைந்த பட்சம் ரூ.50 லட்சம் செலவில், மினி தியேட்டர்கள் உருவாக அரசு உதவி செய்ய வேண்டும். இவற்றை கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் அமைக்க வேண்டும்," என்று அவர் கேட்டுக் கொண்டார்.
சாத்தியமா?
கேயார் கேட்பது போல இந்த மினி திரையரங்குகள் சாத்தியமா? புதுப்படங்கள் வெளியான முதல் வாரத்திலேயே கிட்டத்தட்ட இலவசமாக கேபிள் டிவிக்காரர்கள் ஒளிபரப்பி வரும் நிலையில், கிராமங்களில் முன்பு போல சினிமா ஓட்ட முடியுமா?
டிக்கெட் விலை குறைய வேண்டும்...
இதுகுறித்து நம்மிடம் கருத்து தெரிவித்த தியேட்டர் உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகி, "இப்போது கிராமப்புறங்களில் உள்ள ஒற்றைத் திரை அரங்குகளில் டிக்கெட் விலை சராசரியாக ரூ 100 என்றாகிவிட்டது புதுப்படங்களுக்கு. இது பெரிய மைனஸ். இதை முதலில் முறைப்படுத்த வேண்டும். புதிதாக சிறு அரங்குகள் அமைக்க லோக்கல் புள்ளிகளுக்கு உடனடியாக லைசென்ஸ் வழங்க முன்வர வேண்டும்.
இன்னொரு 50 லட்சம்...
200 பேர் வரை அமரும் அளவுக்கான சிறு அரங்குகளை ரூ 50 லட்சம் முதலீட்டுக்குள் கட்டிவிட முடியும். ஆனால் அதை இயக்க மேற்கொண்டு ரூ 50 லட்சம் வரை செலவழிக்க வேண்டியுள்ளது. இந்த சிக்கலை மட்டும் அரசு களைந்தால் கிராமப்புறங்கள் சிறு அரங்குகள் கட்ட பலரும் முன்வருவார்கள்.
குறைந்த விலைக்கு...
இந்த சிறு அரங்குகளுக்கு மட்டும் குறைந்த விலைக்கு பட அதிபர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் படங்களைத் தரவேண்டும். பங்கு பிரிப்பதில் அதிக அளவு தர வேண்டும். அப்படி ஒரு பாதுகாப்பான சூழல் உருவானால் உடனடியாக 100 அரங்குகள் வரை கூட உருவாகும் சூழல் உள்ளது," என்றார்.
அம்மா திரையரங்குகள்...
ஒரு பிரபல விநியோகஸ்தரிடம் பேசிய போது, "எதற்கு இத்தனை விவாதம்... இப்போதுள்ள நிலையில் சிறு அரங்குகள் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவற்றை முழுவதுமாக தமிழக அரசின் சுற்றுலாத் துறையே அமைத்து வாடகைக்கு தரட்டும். அம்மா பெயரில் பல நல்ல திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் அம்மா திரையரங்குகள் என்ற பெஞ்சம் குறையுமே," என்றார்.
அடடே!
Post a Comment