சென்னை: நடிகையும் தன் மனைவியுமான சிநேகா கர்ப்பம் என்று வந்த செய்திகளை மீண்டும் மறுத்துள்ளார் நடிகர் பிரசன்னா.
புன்னகை இளவரசி என்ற பட்டப்பெயருக்கு சொந்தமான நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர்.
திருமணத்துக்குப் பின்னரும் சிநேகா தொடர்ந்து நடித்து வருகிறார். பிரசன்னாவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சில மாதங்களுக்கு முன் சிநேகா தாய்மையடைந்திருப்பதாக நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் செய்தி வெளியாகின. ஆனால் பின்னர் அதை பிரசன்னா மறுத்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில், சிநேகா கர்ப்பமாக இருப்பதாக கடந்த சில தினங்களாகவே தகவல் பரவி வந்தது. அதுவே செய்தியாக வெளியானது. இதுகுறித்து விசாரிக்க முயன்றபோது, பிரசன்னா மற்றும் சிநேகா இருவருமை தொடர்பில் வரவில்லை. இதுவே செய்தி வெளியானது.
இதைத் தொடர்ந்து சிநேகாவுக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்தனர். அப்போதுதான் இந்த செய்தி உண்மையில்லை என்று பிரசன்னா மறுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பத்திரிக்கை மற்றும் சில ஊடகங்களில் சிநேகா கர்ப்பமாக இருக்கிறார் என வெளிவரும் செய்திகள் உண்மையில்லை. தொடர்ந்து நாங்கள் படங்களில் பிஸியாக நடித்து வருவதால் இப்போதைக்கு குழந்தை பிறப்பை தள்ளி வைத்திருக்கிறோம்.
அப்படி ஒரு சுபசெய்தி இருந்தால் பத்திரிகையாளர்களான உங்களை அழைத்துத்தான் முதலில் பகிர்ந்து கொள்வோம்,' என்று கூறியுள்ளார்.
சிநேகா தற்போது பிரகாஷ்ராஜ் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவாகி வரும் ‘உன் சமையல் அறையில்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு படமொன்றிலும் நடித்து வருகிறார்.
Post a Comment