'ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்

|

சென்னை: இன்றைய சினிமாவின் நிலை படுமோசமாக உள்ளது. இன்றைய படங்களில் கதாநாயகன் வேலைவெட்டிக்கே போவதில்லை. ஒன்று, பெண்ணை சைட் அடிக்கிறான்.. மாலையில் டாஸ்மாக்கில் தவறாமல் சரக்கடிக்கிறான், என்று கடுமையாக விமர்சனம் செய்தார் ராதிகா.

ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள புதிய படம் 'மாலினி 22 பாளையங்கோட்டை'. இப்படத்தின்இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில், நடிகர் கமலஹாசன், விஜய் சேதுபதி, சூர்யா, இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகைகள் நித்யா மேனன், ராதிகா சரத்குமார், பாடலாசிரியர் நா.முத்துக்குமார் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இப்படத்தின் இசைத் தட்டை கமல் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார். டிரைலரை இயக்குனர் கே.பாலச்சந்தர் வெளியிட நடிகர் விஜய் சேதுபதி பெற்றுக் கொண்டார்.

'ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்

விழாவில், நடிகை ராதிகா சரத்குமார் பேசும்போது, "இப்படத்தின் இயக்குனர் ஸ்ரீப்ரியாவும் நானும் குழந்தையில் இருந்தே பழக்கம். சினிமாவில் அவர் ஒரு நடிகையாக நன்றாக நடித்திருந்தார். தற்போது இயக்குனராக களமிறங்கியிருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு புத்திசாலி பெண் என்று அவரைக் கூறலாம். ஆனால், அவர் அதையெல்லாம் காட்டிக் கொள்ளமாட்டார்.

ஒரு பெண்ணாக இருந்து சினிமாவில் செலவு பண்ணுவது என்பது ரொம்பவும் கஷ்டம். அதை நானும் அனுபவித்திருக்கிறேன். இப்போது ஸ்ரீப்ரியாவும் அதையெல்லாம் சமாளித்து, சமூக உணர்வோடு இந்த படத்தைக் கொடுத்திருக்கிறார்.

இன்று வரும் பல படங்களில் டாஸ்மாக் காட்சிகளும், ஹீரோ காலையில் எழுந்ததும் எந்த பெண்ணை சைட் அடிப்பது என்று பேசுவது, அப்பாவை மகன் 'டேய் பாடு' என்றெல்லாம் இழிவாக பேசுவது போன்ற வசனங்கள் நிறைந்த படங்களாகவே வருகின்றன. முன்பெல்லாம் சில்க் ஸ்மிதா பாட்டு ஒன்று கட்டாயம் இருக்க வேண்டும் என தமிழ் சினிமாவில் சொல்வார்கள். இப்போது அது டாஸ்மாக் காட்சியாக வருகிறது. டாஸ்மாக்கில் குடிக்கிற மாதிரி ஒரு காட்சியாக வைக்கவேண்டும் என்பது விதியாகிவிட்டது.

அவற்றையும் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இருந்தாலும், வித்தியாசமான படங்களும் அவ்வப்போது வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன," என்றார்.

 

Post a Comment