இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

|

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

சின்ன வயசிலிருந்தே எல்லாருக்குள்ளும் கற்பனை உலகம் அல்லது உலகங்கள் உண்டு. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அவற்றில் சஞ்சரிக்கத் தவறுவதில்லை. நாம் விரும்பியபடி அந்த உலகில் சுற்றித் திரியலாம். மனசு இச்சைப்படும் நிகழ்வுகளை மட்டுமே நடக்க வைக்கலாம்... எல்லாவற்றையும் நாமே தீர்மானிக்கலாம்!

செல்வராகவன் தன் மனதில் இருந்த கற்பனை உலகங்களுக்கு வண்ணமயமாக வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறார்.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

ஆனால் அந்த கற்பனை உலகங்களில் என்னென்னவெல்லாம் நிகழ வேண்டும் என அவர் விரும்பினாரோ, அவை அசுவாரஸ்யமாக அமைந்துவிட்டன என்பதுதான் இரண்டாம் உலகம் படத்தின் ஆகப் பெரிய குறைபாடு!

ஒரு வறண்ட கற்பனையை, கோடிகளை வாரியிறைத்து வண்ணமயமாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் செல்வா.

திரைக்கதையை அழுத்தமாகவும் ரசிகன் யோசிக்க முடியாத அளவுக்கு விறுவிறுப்பாகவும் படைத்திருந்தால் இந்தப் படத்தின் வீச்சு வேறு மாதிரி இருந்திருக்கும்!

செல்வாவின் இரண்டாம் உலகக் கதை...

இப்போது நாம் வாழும் காதலும் மோதலும் மிக்க பூமி... அதற்கு இணையாக வான்வெளியில் உள்ள இன்னொரு கிரகம் (உலகம் அல்ல). அதில் மோதல் மட்டும்தான் உண்டு. காதல் கிடையாது. அதனால் பூக்களே பூப்பதில்லை. அந்த கிரகத்தின் கடவுளான 'அம்மா'வுக்கு, தங்கள் மண்ணில் காதல் அரும்ப வேண்டும்.. பூக்கள் பூத்துக் குலுங்க வேண்டும் என்ற ஆசை. அதற்கு ஒரு மாவீரன் வேண்டும். அவனுக்கேற்ற ஒரு காதலி வேண்டும்.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

பூலோகத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் காதலிக்கிறார்கள்... அவர்கள் காதல் முழுமையாக வெளிப்படும் ஒரு இரவில், அனுஷ்கா திடீரென மரிக்கிறார். அதற்கு இரு தினங்கள் முன்பே ஆர்யாவின் தந்தை இறக்கிறார். அவரது ஆன்மா அனுஷ்கா இறந்த இடத்தில் நிற்கும் ஆர்யா கண்முன் தோன்றி, 'காதல் உண்மையானதென்றால்... உன் காதலியை நீ மீண்டும் பார்ப்பாய்' என்கிறார். அதை நம்பி, ஊரெல்லாம் சுற்றுகிறார் ஆர்யா. ஒரு நாள், பேய் மழை.. பூமி அதிர்கிறது. கண்ணெதிரே ஒரு பழைய பியட் கார் உருண்டு செல்கிறது... அதில் ஏறி பயணிக்கிறார் ஆர்யா... அப்படியே அந்த இரண்டாவது கிரகத்துக்குப் போய் விடுகிறார்..!

அவர் வருகை பூக்களையும் காதலையும் பூக்க வைக்கிறது அந்த வேற்று கிரகத்தில்...

-இப்படிப் போகிறது இரண்டாம் உலகம் குறித்த செல்வராகவனின் அதிமிகைக் கற்பனை. முடிவில் மூன்றாவதாக வேறு உலகத்தை வேறு காட்டுகிறது, 'இன்னொரு பாகம் இருக்குடி..' என மிரட்டுகிறது!

பேன்டஸி.. அதாவது கற்பனை என்று வந்த பிறகு அது கேமரூனின் பண்டோராவாக இருந்தால் என்ன... அதன் பாதிப்பில் உருவான இரண்டாம் உலகமாக இருந்தால் என்ன... பெரிய வித்தியாசமில்லை, ரசிக்கத் தடையுமில்லை.

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

[இரண்டாம் உலகம் படங்கள்]

ஆனால் அங்கே நடக்கிற நிகழ்வுகள்.. சம்பவங்களின் தொடர்ச்சிகள் எத்தனை சுவாரஸ்யமாக, விறுவிறுப்பாக இருக்க வேண்டும்? அப்படி எதுவுமே இரண்டாம் உலகத்தில் இல்லை. இதுதான் முதல் பிரச்சினை.

அனுஷ்கா அறிமுகத்தில் தொடங்கி பல விஷயங்களில் அவதாரை ஜெராக்ஸ் எடுக்க முயன்றிருக்கிறார் செல்வராகவன். இது தேவையற்றது. நமது பாட்டன் பாட்டி சொன்ன செவி வழிக் கதைகளை நவீனப்படுத்தினால் கூடப் போதும்... பல அவதார்களைக் காட்ட முடியும்!

லாஜிக்கை விட்டுத் தள்ளுங்கள்... ஆனால் ஒரு காட்சியாவது ரசிக்கும்படி இருக்கிறதா என்றால்... ம்ஹூம்!

ஆர்யாவை அனுஷ்கா மாப்பிள்ளை கேட்டும் பூலோகக் காட்சி தொடங்கி, இந்த இருவரும் சேர மறுக்கும் அந்த இரண்டாம் உலகக் காட்சிகள் வரை எதிலுமே ஒரு ஈர்ப்பில்லை.

ஆனால் ஒரு நிலா இரவில் காதல் உணர்ச்சியில் பின்னிப் பிணைந்து, விடிய விடியப் பேசி, கடைசிவரை அந்த உதட்டுச் சந்திப்பு நடக்காமல் போய் அனுஷ்கா உயிர் துறக்கும் அந்த ஒரே ஒரு காட்சியில் 7ஜி செல்வராகவனைப் பார்க்க முடிந்தது!

இரண்டாம் உலகம்- சிறப்பு விமர்சனம்

நடிப்பு என்று பார்த்தால் ஆர்யா, அனுஷ்கா இருவருமே ஒரு கட்டத்துக்குப் பிறகு என்ன பண்ணுவதென்றே தெரியாமல் விழிக்கிறார்கள். அதிலும் மயக்கம் என்ன பாணியில் வரும் ஒரு பாட்டுக்கு அனுஷ்கா ஒப்புக்கு ஆடுவார் பாருங்கள்... அதில் தெரிகிறது எந்த அளவு வெறுத்துப் போய் நடித்திருக்கிறார்கள் என்று!

இரண்டாம் உலகத்தின் கடவுள் என்று ஒரு சின்னப் பெண்ணைக் காட்டுகிறார்கள். அது கடவுளா.. கைப்பிள்ளையா என்று தெரியாத அளவுக்கு சித்தரிக்கப்பட்டிருப்பதால் பலத்த கேலிக்குள்ளாகிறது.

இரண்டு உலகங்கள் இணைவது சாத்தியமா... சாத்தியமில்லாத இந்த விஷயத்தை சாத்தியம் எனக் காட்ட முயற்சித்த செல்வராகவன் அதற்காக எத்தனை மெனக்கெட்டிருக்க வேண்டும். ஆனால் ஏதோ பக்கத்து வீட்டு காம்பவுண்டைக் கடப்பது மாதிரி ஆர்யா இந்த உலகிலிருந்து அந்த உலகுக்கு போய் வருகிறார்!

அதிலும் மூன்றாம் உலகத்துக்கு ஆர்யா வரும் விதம் மகா சொதப்பல். இரண்டாம் உலகத்தின் ஒரு நதியில் விழும் ஆர்யா, மூன்றாம் உலகத்தில் ஒரு கடலில் எழுகிறார்! இரண்டு உலகங்களுக்கும் இடையில் அத்தாதண்டி ஓட்டையா...?

எல்லா படங்களிலும் தன் பாத்திரங்களுக்கென்று தனி மொழி வைத்திருக்கிறார் செல்வராகவன். மயக்கம் என்ன-வில் 'ஆய் போட்டோ' மாதிரி, இதில் 'குப்ப ராஜா...'!

பெருங் குழப்பத்திலிருந்திருப்பார் போலிருக்கிறது படத்தின் எடிட்டர். கண்டபடி ஓடவிட்டு கத்தரி போட்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் உழைப்பும் அவரது ஒளிப்பதிவுடன் சில காட்சிகளை கிராபிக்ஸில் குழைத்திருக்கும் விதம் அபாரம். சில காட்சிகளில்தான் இந்த அபாரமெல்லாம்... பெரும்பாலான காட்சிகளில் கிராபிக்ஸும் ரொம்ப குழந்தைத்தனமாகவே உள்ளது.

இந்தப் படத்தின் இசையும் பின்னணி இசையும் கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை. இந்த இரண்டையும் வெவ்வேறு பெயர்களில் செய்திருந்தாலும், தரம் செல்வா பாஷையில் 'குப்ப'!

செல்வராகவனின் இரண்டாம் உலகத்தை ரூ 50 கோடி குப்பை என்று சுலபத்தில் தூர எறிந்துவிடலாம். அதற்குத் தகுதியானதாகவே இந்தப் படம் உள்ளது.

ஆனால் ஒரு படைப்பாளியாக செல்வராகவனை தூக்கி எறிய இன்னும் மனம் வரவில்லை.. ரசிகனின் இந்த மனநிலை செல்வாவுக்குப் புரிய வேண்டும்... தயாரிப்பாளர்களுக்கும் இருக்க வேண்டும்!

சாத்தியம் இல்லை என்றாலும், ஒரு விஷயத்தில் மட்டும் பரம திருப்தி... மூன்று உலகங்களிலும் பேசப்படும் மொழி தமிழ்தான்!

 

Post a Comment