மீண்டும் ஆர்யா - சந்தானம் - ராஜேஷ்... இமேஜை நிமிர்த்த ஒரு அவசர கூட்டணி!!

|

இயக்குநர் ராஜேஷ், நடிகர் ஆர்யா மற்றும் காமெடியன் சந்தானம் மூவரும் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்தை ஆர்யாவே தனது தி நெக்ஸ்ட் பிக் நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம்.

இயக்குநர் ராஜேஷ் மற்றும் அவரது நிரந்தர காமெடியன் சந்தானம் ஆகிய இருவருக்கும் இப்போது பெரிய ஹிட் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது சமீபத்தில் வெளிவந்த அழகுராஜா.

மீண்டும் ஆர்யா - சந்தானம் - ராஜேஷ்... இமேஜை நிமிர்த்த ஒரு அவசர கூட்டணி!!

யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு எதிர்மறைக் கருத்துகள், விமர்சனங்கள் அந்தப் படத்துக்கு எதிராகக் குவிகின்றன. சந்தானத்துக்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகள், அவரது சமீபத்திய சில வசனங்களால்.

இந்த சூழலில், சட்டென தனது நண்பர்களுக்கு கைகொடுக்க வந்துள்ளார் ஆர்யா. ராஜேஷ் இயக்கிய முதல் மூன்று படங்களிலும் நடித்தவர் ஆர்யா. சிவா மனசுல சக்தி மற்றும ஓகே ஓகே போன்றவற்றில் முக்கிய வேடத்திலும், பாஸ் என்கிற பாஸ்கரனில் ஹீரோவாகவும் நடித்திருந்தார் ஆர்யா. மூன்றுமே சூப்பர் ஹிட் படங்கள்.

இப்போது ஆர்யா - சந்தானம் நடிக்கும் புதிய படத்தை சூட்டோடு சூடாக உருவாக்குகிறார் ராஜேஷ்.

ஆர்யா இப்போது மகிழ் திருமேனியின் படம் மற்றும் எஸ்பி ஜனநாதனின் புறம்போக்கு போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் ராஜேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவருக்கும் கால்ஷீட்டுகள் தந்துள்ளார்.

அநேகமாக டிசம்பரில் இந்த புதிய படம் தொடங்கிவிடும் என்கிறார்கள்.

 

Post a Comment