மும்பை: நடிகை ஸ்ருதி ஹாசனை அவரது மும்பை வீட்டில் நுழைந்து தாக்கியது அவரது தீவிர ரசிகர் என்பது தெரிய வந்துள்ளது. இதுபற்றி இப்போது போலீசில் ஸ்ருதி புகார் செய்துள்ளதால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் கமலஹாசன்- சரிகா தம்பதியின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தற்போது பாலிவுட்டில் பிஸியாக உள்ளதால், அங்கு பாந்த்ரா பகுதியில் தனி குடியிருப்பில் தங்கியுள்ளார்.
அவர் தனியாக வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு ஸ்ருதிஹாசன் வீட்டில் இருந்த போது அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்டு, கதவை திறந்து யார் என்று விசாரிப்பதற்குள் 27 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் வீட்டுக்குள் புகுந்தான்.
திடீர் என்று ஸ்ருதி இறுக்கிப் பிடித்து, கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான். உடனே சுதாரித்துக் கொண்ட சுருதி அவனை வெளியே தள்ளி கதவை சாத்தினார். இதற்கிடையே சத்தம் கேட்டு காவலாளி வந்து விட்டதால் மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி போலீசில் ஸ்ருதி ஆரம்பத்தில் புகார் தெரிவிக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை.
ஆனாலும் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதில் ஸ்ருதியைத் தாக்கிய அந்த மர்ம மனிதன் ஸ்ருதியின் தீவிர ரசிகர் என்று தெரியவந்துள்ளது.
ஸ்ருதியை கடந்த ஒரு வருடமாகவே பின் தொடர்ந்து வந்துள்ளார். ஸ்ருதி போகும் இடங்களுக்கெல்லாம் பின்தொடர்ந்து சென்றுள்ளான்.
ட்விட்டர் இணைய தளத்திலும் அடிக்கடி தொடர்பு கொண்டு இருக்கிறான். ஸ்ருதியை சந்திக்கும ஆவலில் படப்பிடிப்பு தளங்களில் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.
பிரபுதேவா டைரக்ஷனில் ராமய்யா வஸ்தாவய்யா படத்தில் ஸ்ருதி நடித்தபோதும் இதே நபர்தான் ஸ்ருதியைத் தொட முயன்று விரட்டியடிக்கப்பட்டாராம்.
போலீசில் புகார்
தந்தையின் அறிவுறுத்தல் மற்றும் சக நடிகர்களின் ஆலோசனையின் பேரில் இப்போது பாந்த்ரா போலீசில் புகார் செய்தார் ஸ்ருதி.
போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம மனிதனை தேடிவருகிறார்கள். ஸ்ருதியை சந்திக்கும் ஆவலில் வந்தானா? அல்லது முன் விரோதமா? யாராவது அவனை ஏவி விட்டார்களா என்றெல்லாம் விசாரணை நடக்கிறது.
ஸ்ருதியிடமும் முதல்கட்ட விசாரணையை நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்துக்குப் பிறகு ரொம்ப பயந்து போயுள்ள ஸ்ருதி தன் தோழி வீட்டில் தங்கியுள்ளார்.
Post a Comment