அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான ‘வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை", தமிழகத்தில் இயங்கும் ‘இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை"யுடன் இணைந்து முதன்முறையாக தமிழிசை மற்றும் நாட்டிய நாடகம் நடத்துகிறது.
‘2013 தமிழிசை விழா" என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி சென்னையில் வருகிற ஞாயிற்றுக் கிழமை, டிசம்பர் 29ம் தேதி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 நடக்கிறது.
சென்னை தி நகரில் உள்ள பசும்பொன் தேவர் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த ‘2013 தமிழிசை விழா'வில், மாலை 4:00 மணி முதல் 6:00 மணிவரை பாடகி சுசித்ரா பாலசுப்ரமனியம் புறநானூற்றுப் பாடல்களையும், பாடகி அனுராதா கிருஷ்ணமூர்த்தி தமிழிசைப் பாடல்களையும் பாட இருக்கிறார்கள்.
அதன்பிறகு, மாலை 6:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை சிறப்பு விருந்தினர்கள் பேசுகிறார்கள்.
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையைச் சேர்ந்த முனைவர் சுந்தர வடிவேல் வரவேற்புரை நிகழ்த்த, மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மருத்துவர் என்.சேதுராமன் அவர்கள் தலைமையேற்க இருக்கிறார்கள்.
திருப்பூர் முத்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கேபிகே செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்கள். ஜெம் தொழிற் குழுமத்தின் தலைவர் தொழிலதிபர் ஆர் வீரமணி, வேலூர் விஐடி பல்கலைக்கழகதின் நிறுவனர் கல்வியாளர் ஜி விஸ்வநாதன், கோ-ஆப்டெக்ஸ் மேலான் இயக்குநர் சகாயம் ஐஏஎஸ், மற்றும் விஜிபி தொழில் குழுமத்தின் தலைவர் விஜி சந்தோசம் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள்.
பிறகு, தமிழிசை விழாவின் முக்கிய நிகழ்வாக 'நடராஜ் நாட்டிய வித்யாலயா' வழங்கும் ‘மாவீரன் தீரன் சின்னமை நாட்டிய நாடகம்' அரங்கேற இருகிறது.
இந்த நாட்டியத்துக்கு குரு: நாகை. என்.பாலகுமார், பாடல்கள்: கவிமுகில் கோபாலகிருஷ்ணன்.
நிறைவில், இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளையைச் சேர்ந்த 'இன்னிசை ஏந்தல்' திருபுவனம் ஆத்மநாதன் நன்றி கூறுகிறார். ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை'யைச் சேர்ந்த கொழந்தவேல் இராமசாமி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
தமிழிசை விழாவைக் கடந்த சில வருடங்களாகவே அமெரிக்காவில் நடத்திவரும் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை", முதன்முதலாக அமெரிக்காவிற்கு வெளியே தாய்த் தமிழகத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்துவது குறிப்பிடத்தக்கது. இதே போன்று தமிழர்கள் வாழ்கின்ற உலகின் அனைத்துப் பகுதிகளிலும் நிகழ்ச்சிகள் நடத்த பேரவை விருப்பம் கொண்டுள்ளது.
Post a Comment