சென்னை: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா இணைந்து நடித்த எவர்கிரீன் ப்ளாக் பஸ்டரான ஆயிரத்தில் ஒருவன் படம், 49 ஆண்டுகளுக்குப் பிறகு டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் வெளியாகிறது.
ஏற்கனவே கர்ணன், பாசமலர், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து ரிலீஸ் செய்தனர். ரசிகர்கள் இப்படங்களை ஆர்வமாக பார்த்தார்கள். கர்ணன் படம் நல்ல வசூலைக் குவித்தது.
முதல் முறையாக
இதுவரை எம்ஜிஆரின் படங்கள் புதிய பிரிண்ட் போட்டு மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. ஒரு வாரம் இரு வாரங்கள் ஓடினாலும் போட்ட காசை விட பலமடங்கு அதிகமாக வசூலிக்கும் 'கோல்ட்' எம்ஜிஆரின் படங்கள்.
இப்போதுதான் முதல் முறையாக ஆயிரத்தில் ஒருவன் படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார்கள்.
49 ஆண்டுகள் கழித்து
ஆயிரத்தில் ஒருவன் படம் 1965-ல் ரிலீசானது. எம்.ஜி.ஆருடன் தற்போதைய முதல்வர் ஜெயலலிதா, நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ்.மனோகர் போன்றோரும் நடித்து இருந்தனர். பி.ஆர். பந்துலு இயக்கினார். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். 49 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் டிஜிட்டலில் வெளியாகிறது.
அதோ அந்தப் பறவை போல...
கொடுங்கோல் மன்னனை எதிர்த்து போராடும் ஒரு வீரமிக்க மருத்துவரின் கதை. கடலிலும் தீவுகளிலும் பிரமாண்டமாக படமாக்கி இருந்தனர். இந்த படத்தில் இடம் பெற்ற ஆடாமல் ஆடுகிறேன், அதோ அந்த பறவை போல, நாணமோ இன்னும் நாணமோ, ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ, பருவம் எனது பாடல், உன்னை நான் சந்தித்தேன், ஏன் என்ற கேள்வி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து இன்றைக்கும் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம்
ஆயிரத்தில் ஒருவன் படத்தை டிஜிட்டலில் புதுப்பிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ரீரிக்கார்டிங், ஒலி ஒளியும் மெருகேற்றப்படுகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) இப்படம் தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது.
Post a Comment