சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி, அவரது ரசிகர்கள் கோலாகலமான கொண்டாட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரமாகவே பல்வேறு நல உதவிகளை வழங்கி வரும் ரசிகர்கள் இன்று, அதிகாலையிலிருந்தே ரத்த தானம், அன்னதானம், படிப்பு உதவி, ஆதரவற்றோர் இல்லங்களுக்கு நல உதவிகள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உதவிகளைச் செய்து வருகின்றனர்.
பொதுவாக ரஜினி தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில்லை. ஆனால் உலகெங்கும் உள்ள ரசிகர்கள் அமோகமாகக் கொண்டாடுகிறார்கள்.
தன் பிறந்த நாளை முன்னிட்ட பல்லாயிரம் ஏழை மக்களுக்கு உதவிகள் கிடைப்பதை எண்ணி ரஜினியும் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு ஆட்சேபம் சொன்னதில்லை.
அதேபோல எந்த ஊரிலும் ரஜினி பிறந்த நாள் விழா கொண்டாட்டங்கள் மக்களுக்கு இடைஞ்சலாகவோ, முகம் சுளிக்கும் வகையிலோ இருந்ததில்லை. அதனால்தான் ரசிகர்களோடு ஏராளமான பொதுமக்களும் கலந்து கொள்கிறார்கள் இந்த விழாக்களில்.
மற்ற மாவட்டங்களைக் காட்டிலும் சேலம், திருச்சி, மதுரை மாவட்டங்களில்தான் இந்த ஆண்டு ரஜினி பிறந்த நாள் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாகவே ரஜினி பிறந்த நாள் விழாதான்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவும், உடையும், உதவித் தொகையும், கல்வி உதவியும், மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளும் கிடைத்து வருகின்றன ரஜினி ரசிகர்கள் மூலம்.
சென்னை முழுக்க சுவரெங்கும் ரஜினி பிறந்த நாள் போஸ்டர்கள், பல பகுதிகளிலும் பிறந்த நாள் கொண்டாட்டம் என திருவிழா களைகட்டியிருக்கிறது இன்று.
இதுகுறித்து சென்னை மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் நற்பணி மன்ற பொறுப்பாளர் ராமதாஸ் கூறுகையில், "பிறந்த நாள் விழா கொண்டாடுங்க. ஆனா அது யாருக்கும் தொந்தரவா இருக்கக் கூடாது. அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் கொண்டாடுங்க," என்பதுதான் தலைவர் ரஜினியின் உத்தரவு. அதை இதுவரை எந்த ரசிகரும் மன்ற பொறுப்பாளரும் மீறியதில்லை. தலைவரின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகளை மாநிலம் முழுவதும் உள்ள மன்றங்கள் மக்களுக்கு வழங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இது இரு மடங்காகியுள்ளது. காரணம், இளைஞர்கள் ஏராளமானோர் தலைவரின் ரசிகர்களாக இருப்பதுதான்," என்றார்.
மகாராஷ்ட்ராவில்..
மகாராஷ்ட்ராவிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர் மன்றங்கள் உள்ளன ரஜினிக்கு. இவற்றின் தலைமை மன்றத்துக்கு ஆதிமூலம் என்பவர் தலைவராக உள்ளார். ஆண்டு முழுவதும் ரஜினி பெயரில் பல விழாக்கள் நடத்தி வரும் இவர், இன்று பிறந்த நாளன்று முழுவதும் மக்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
ஜப்பான் ரசிகர்கள்
தமிழகத்தைப் போலவே, ஜப்பானில் உள்ள ரஜினியின் தீவிர ரசிகர்களும் இன்று அவரது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
Post a Comment