பெங்களூர்: பெங்களூரில் நடக்கும் 6 வது சர்வதேச திரைப்பட விழாவைத் தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
எட்டு நாட்கள் நடக்கும் இந்த திரைப்பட விழா, வரும் டிசம்பர் 26-ம் தேதி தொடங்குகிறது.
கர்நாடக அரசு இந்த திரைப்பட விழாவுக்காக ரூ 2 கோடியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. 45 நாடுகளிலிருந்து 145 படங்கள் பங்கேற்கும் இந்த திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக கர்நாடக முதல்வர் சித்தராமையா பங்கேற்கிறார்.
இந்த விழாவில் கன்னட சினிமாவின் லெஜன்ட் என புகழப்படும் மறைந்த டாக்டர் ராஜ்குமாரின் படங்கள் அதிக அளவில் திரையிடப்பட உள்ளன. மேலும் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படப் பிரிவில் போட்டியிட்ட 14 திரைப்படங்கள் பெங்களூர் விழாவில் இடம்பெறுகின்றன.
இவை தவிர, பெர்லின், கேன்ஸ், கர்லோவி வாரி, மாஸ்கோ, வெனிஸ், டொரன்டோ போன்ற உலகின் பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகள் வென்ற பல படங்கள் திரையிடப்பட உள்ளன.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர்கள் அன்ட்ரஜெஸ் வாஸ்டா, அஸ்கார் பர்ஹாடி, இஸ்ட்வான் ஸ்ஸபோ, ப்ரான்காய்ஸ் ஓஸோன், சுஸன் ப்லியர், கோரன் பாஸ்கால்ஜெவிக், மைக் லெய்க், க்ளெய்ர் டெனிஸ் மற்றும் தாமஸ் வின்டர்பெர்க் போன்றவர்களின் சிறந்த படைப்புகளை இந்த விழாவில் பார்க்க முடியும்.
ஃபன் சினிமாஸ், சுலோச்சனா, ப்ரியதர்ஷினி, பாதாமி ஹவுஸ் போன்ற இடங்களில் இந்தப் படங்கள் திரையிடப்பட உள்ளன.
இந்த விழாவின் இறுதியில் இந்திய மற்றும் ஆசியாவின் பிறநாடுகளிலிருந்து வந்த படங்களுக்கிடையில் போட்டிகள் வைத்து ரொக்கப் பரிசு வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.
விழாவை வரும் டிசம்பர் 26-ம் தேதி முறைப்படி தொடங்கி வைக்கிறார் நடிகர் கமல்ஹாஸன்.
Post a Comment