சென்னை: இன்னும் எத்தனை காலத்துக்குதான் ஈரானியப் படங்களை வியந்து பார்த்து பாராட்டிக் கொண்டிருப்பது... இதோ, இனி நாங்கள் எடுக்கிறோம், ஈரானிய, இத்தாலிய, ப்ரெஞ்சு சினிமாக்காரர்கள் அதைப் பார்த்து வியந்து பாராட்டட்டும் என இயக்குநர் பாலு மகேந்திரா கூறினார்.
சென்னை பிரசாத் லேபில் நடந்த தலைமுறைகள் படத்தின் அறிமுக செய்தியாளர் சந்திப்பில் பாலுமகேந்திரா பேசுகையில், "கோடாக் கம்பெனி இனி நெகடிவ் தயாரிக்கப் போவதில்லை என்று கூறியதும், இனி என்ன செய்யப் போகிறோம் என்று திகைத்து நின்றேன். ஏனென்றால் எனக்கு பிலிமில் படமெடுத்துதான் பழக்கம்.
ஆனால் நாளைய சினிமா டிஜிட்டல் சினிமா தான் என்ற ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. என் பிள்ளைகள் நாளை எடுக்கப்போகும் திரைப்படங்கள் டிஜிட்டல் திரைப்படங்கள் தான் என்று எனக்கு தோன்றியது.
இயக்குனர் சசிகுமார் ஈரான், கொரியா, ஃபிரான்ஸ் ஆகிய இடங்களிலிருந்து படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள். நாம் வாயை பிளந்து பார்த்து வியந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னார். ஏன் இனி நாங்கள் இங்கு படம் எடுத்து அனுப்புவோம், அவர்கள் அங்கு வாயை பிளந்து பார்க்கட்டுமே.
என் பிள்ளைகளிடம் நான் எப்போதும் சொல்வது தான் அது. நீங்கள் படம் எடுங்கள். நாம் எந்த விதத்தில் குறைந்துவிட்டோம். கலாச்சார ரீதியிலா? தொழில்நுட்ப ரீதியிலா? எந்த வகையிலும் கிடையாது. என் பிள்ளைகளுக்கு ஒரு முன்மாதிரி படமாக நான் ஒரு படம் எடுத்து காட்ட வேண்டும் என்று எனக்கு தோன்றியது.அந்த நோக்கத்துடன் எடுக்கப்பட்ட படம்தான் தலைமுறைகள்.
இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நான் முடிவெடுத்ததும் என் மனசில் தோன்றியவர் இயக்குநர் - நடிகர் - தயாரிப்பாளர் சசிகுமார்தான். அவருக்கு போன் செய்து சசி நான் உங்களைப் பார்க்கணுமே என்றேன். நீங்க இருக்கிற இடம் சொல்லுங்க சார், நானே வர்றேன் என்றார். இல்லை, நான் வருவதுதான் முறை என்று சொல்லி அவர் அலுவலகம் சென்றேன்.
தலைமுறைகள் படத்தின் கதையை பாதி சொல்லிக் கொண்டிருந்த போதே, இந்தப் படத்தை நான் தயாரிக்கிறேன் சார் என்றார்.
நன்றி சசிகுமார். ஒரு நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக அவரை இந்தப் படத்தில் ஒரே ஒரு காட்சியில்தான் நடிக்க வைக்க முடிந்தது. ஆனால் அந்த ஒரு காட்சியை எடுத்த பிறகுதான், இன்னும் நான்கைந்து சீன்கள் வருவதுபோல மாற்றியிருக்கலாமே என்று தோன்றியது. நான் இதை வெறும் புகழ்ச்சிக்காக சொல்லவில்லை," என்றார்.
Post a Comment