வெற்றி இரு மடங்கு பலம் தரும்.. தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்!- விஜய்

|

வெற்றி இரு மடங்கு பலம் தரும்.. தோல்வி இரு மடங்கு அனுபவம் தரும்!- விஜய்

சென்னை: வெற்றி இரு மடங்கு பலத்தைக் கொடுக்கும்... தோல்வி இரு மடங்கு அனுபவத்தைக் கொடுக்கும் என்றார் நடிகர் விஜய்.

ஆரம்ப காலத்தில் தன்னை வைத்துப் படமெடுத்து, பின் நலிவுற்ற நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள் 5 பேருக்கு தலா 5 லட்சம் நிதியுதவி அளித்தார் விஜய்.

இந்த நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "பல பேர்களின் கூட்டு முயற்சியில் உருவாவதுதான் சினிமா. அதில், மற்ற எல்லோரும் உழைப்பை மட்டும்தான் தருகிறார்கள். தயாரிப்பாளர்கள் மட்டும்தான் உழைப்பையும், சம்பாதித்த பணத்தையும் போடுகிறார்கள்.

படம் பூஜை போடுவதில் ஆரம்பித்து, அந்த படம் ரிலீஸ் ஆகிற வரை 100 பேர்களுக்கு சம்பளம் கொடுத்து, சாப்பாடும் போட்டு ஒரு தாயைப்போல் கவனித்துக் கொள்கிறார்கள்.

அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் மனசு கஷ்டப்படுகிறது. என் ஆரம்ப கால தயாரிப்பாளர்கள் ஏதோ ஒரு விதத்தில் கஷ்டப்படும்போது, அவர்களுக்கு கை கொடுப்பது என் கடமை என்று தோன்றுகிறது. இத்தனை நாள் இல்லாமல் ஏன் இப்போது தோன்றுகிறது? என்று கேட்கலாம். நல்ல விஷயங்கள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். அதை உடனே செயல்படுத்துவதுதான் முக்கியம்.

வெற்றி - தோல்வி

இதைப்பார்த்து இன்னும் சிலர் இதுபோன்ற உதவிகளை செய்தால், சந்தோஷப்படுவேன். வெற்றி, 2 மடங்கு நம்பிக்கையையும், தோல்வி 2 மடங்கு அனுபவத்தையும் கொடுக்கும். அந்த அனுபவங்களை கொண்டு தயாரிப்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை.''

-இவ்வாறு விஜய் பேசினார்.

 

Post a Comment