இசைஞானி இளையராஜாவின் இதய ரத்தக் குழாய்களில் இருந்த இரு அடைப்புகள் நீக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஓய்வெடுத்து வரும் இளையராஜா, இன்னும் மூன்று தினங்களில் வீடு திரும்புகிறார்.
இதனால் அவரது மலேசிய இசை நிகழ்ச்சி தள்ளிப் போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இசைஞானி இளையராஜா வருகிற 28-ந் தேதி மலேசியாவில் நடைபெறும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்கான ஒத்திகை சாலி கிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் பிற்பகல் இந்த ஒத்திகையில் இளையராஜா கலந்து கொண்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது அவரது இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் லேசான அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை ஆபரேஷன் செய்யாமல் டாக்டர்கள் அகற்றினர்.
இதையடுத்து நேற்று காலை வரையிலும் அவசர சிகிச்சை பிரிவிலேயே இளையராஜா அனுமதிப்பட்டிருந்தார். பிற்பகலில் அவர் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை தேறி வருகிறது.
இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு டாக்டர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இளையராஜா இருப்பார் என்றும், அதன் பிறகே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
Post a Comment