சென்னை: தென்னாப்பிரிக்காவில் சினிமா விழாவில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதாக வந்த செய்திகள் உண்மையில்லை.. நான் நலமாக உள்ளேன், என்று பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு மேடையிலேயே சுகவீனம் ஏற்பட்டதாகவும், அவரை தனி விமானத்தில் சென்னை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து இன்று எஸ்பிபி அளித்துள்ள விளக்கத்தில், தனக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது உண்மை என்றும், அதன் பின்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அழைத்தபோது, தனக்கு சோர்வாக இருப்பதால் பங்கேற்க இயலாது என்று சாதாரணமாக சொன்ன பதில் வேறு விதமாக வெளியாகி விட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது பேட்டியில், "நான் ரொம்ப நல்லா இருக்கேன். எனக்கு ஒண்ணும் ஆகல. ரசிகர்களாகிய உங்களுடைய கருணை, உங்களுடைய அருள், உங்களுடைய ஆசி இருக்கும்வரையிலும் எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு ஒண்ணும் நடக்காது. நான் நன்றாக இருக்கின்றேன். என் மீது இவ்வளவு அன்பு வைத்து எனக்காக பிரார்த்தனை பண்ணியுள்ளீர்கள். என்னை பற்றி விசாரித்துள்ளீர்கள். என் வீட்டுக்கு போன் செய்து எப்படி இருக்கார் என்று கேட்டுள்ளீர்கள். எனக்கு மெயில் அனுப்பியுள்ளீர்கள். நான் பேஸ்புக் பக்கத்துக்கு வருவது கிடையாது. அதனால் சிலருக்கு பயமாக இருந்திருக்கலாம். உங்கள் அன்புக்கு நான் எப்போதும் அடிமை. வணக்கம்," என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment